மும்பை: டி20 உலகக் கோப்பையின் தொடக்கத்தில் இந்திய இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா ரன் குவிக்கத் திணறினார். மூன்று டக் அவுட்களைச் சந்தித்து பெரும் சவால்களை எதிர்கொண்ட அவருக்கு, வழிகாட்டியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யுவராஜ் சிங் அளித்த ஆலோசனைகள் பெரும் நம்பிக்கையளித்தாக அவர் கூறினார்.
அவரது அதிரடி ஆட்டத்திற்கு ஏற்ற களமாக கருதப்பட்ட டி20 உலகக் கோப்பை, அபிஷேக்கின் அணுகுமுறையையும் தன்னம்பிக்கையையும் சோதித்தது. இருப்பினும், இந்த சரிவிலிருந்து மீண்டெழுந்த அவர், சக வீரர்களுடன் இணைந்து உலகக் கோப்பை வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

கடினமான சூழல் குறித்து யுவராஜிடம் பேசியது பற்றி அபிஷேக் சர்மா கூறியுள்ளார், "நான் யுவி பாயுடன் தொடர்ந்து பேசினேன். நேர்மையான ஆலோசனைக்காக நான் எப்போதும் அணுகக்கூடியவர் அவர். அவரது செய்தி எளிதானது. 'வீரராக இருக்கும் நீங்கள் யார் என்பதை மாற்றிக் கொள்ளாதீர்கள்'," என்று தெரிவித்தார்.

"ஆக்ரோஷ ஆட்டக்காரர்களுக்கு இப்படிப்பட்ட சரிவுகள் இயல்பு. ஆனால், உங்கள் பலங்களை நம்பி விளையாடினால் ரன்கள் தானாக வரும்," என யுவராஜ் சிங் அறிவுறுத்தினார். இந்த அறிவுரை அபிஷேக்கிற்கு மீண்டும் சிறப்பாக செயல்பட உதவியது.
இந்த வழிகாட்டுதலுக்குப் பிறகு அபிஷேக்கின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிராக முக்கியமான 55 ரன்களும், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வெறும் 21 பந்துகளில் மின்னல் வேக 52 ரன்களும் அடித்து அசத்தினார்.
தனது இயல்பான ஆட்டத்தை நம்புவது குறித்து அபிஷேக், "நான் இந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்த எனது ஆட்ட பாணியிலிருந்து விலக விரும்பவில்லை. ஆரம்பத்தில் ஷாட் தேர்வில் தெளிவாக இருக்க முயற்சித்ததுதான் நான் செய்த ஒரே காரியம்," என்றார். அவர் அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக டக் அவுட் ஆனார்.

இந்த தொடர் தோல்விகள் அபிஷேக்கை மனமுடையும் நிலைக்குத் தள்ளின. அப்போது மூத்த அணி வீரர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். "கிரிக்கெட்டை நேசிக்கும் இந்தியாவில் அழுத்தத்தைத் தவிர்க்க முடியாது," என்று கூறிய அவர், அணி சூழலில் கவனம் செலுத்துவது முக்கியம் என வலியுறுத்தினார்.