மும்பை : நமது நாட்டில் அதிக ரசிகர்கள் உடையவர்கள் என்றால் இரண்டாவது இடத்தில் கிரிக்கெட் வீரர்களும் முதலிடத்தில் சினிமா நட்சத்திரங்களும் இருப்பார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உடைய நடிகர் என்றால் அது அஜித் தான்.
அஜித் பொதுவாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவும் மாட்டார். எந்த பேட்டியும் அவ்வளவாக கொடுத்ததும் கிடையாது. ஆனால் அஜித் அப்படி ஏதேனும் பேசினால் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த கருத்துக்களையும் உடையதாக இருக்கும்.

எப்படி நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கணித்து கூறுவாரோ, அதேபோல் அஜித் கிரிக்கெட் தொடர்பாக 14 ஆண்டுகளுக்கு முன்பு கணித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் அஜித் ஆழ்கடல் தான் அமைதியாக இருக்கும் என்பதற்கு உதாரணமாக தற்போது திகழும் வகையில் இந்த வீடியோ அமைந்திருக்கிறது.
அதில் நடிகர் அஜித் ஆங்கிலச் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நெறியாளர் சினிமா மற்றும் விளையாட்டு குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்த நடிகர் அஜித் இனி மக்கள் விளையாட்டுக்கு என்று அதிக நேரத்தை ஒதுக்கி பார்க்க மாட்டார்கள். விளையாட்டு பிரபலம் அடைய வேண்டும் என்றால் அது தொலைக்காட்சியை சுற்றியே இருக்க வேண்டும்.
தொலைக்காட்சிக்கு ஏற்ற வகையில் எது சிறப்பாக இருக்கிறதோ அதனை சுற்றியே விளையாட்டு உலகமும் அமையும். இப்போது எல்லாம் ஒரு விளையாட்டை பார்ப்பதற்காக மக்கள் நீண்ட நேரம் செலவிடுவதில்லை. அதனால் தான் தற்போது டி20 கிரிக்கெட் பிரபலம் அடைந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள் 3 மணி நேரத்திற்குள்ளேயே முடிவடைந்து விடுகிறது.
அதனைத் தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கிரிக்கெட் ஒரு நாள் ஐந்து நாட்கள் என விளையாடிய காலம் போய் தற்போது மூன்று மணி நேரத்திற்கு சுருங்கி விட்டது. நீங்கள் அமெரிக்காவில் உள்ள விளையாட்டு வகைகளை எடுத்துப் பார்த்தாலே உங்களுக்கு புரியும். அது அனைத்துமே மூன்று மணி நேரத்திற்குள் முடிவடையும் வகையில் இருக்கும்.
இனி விளையாட்டு அந்த வகையில் மாறும் என நான் நம்புகிறேன். வரும் காலத்தில் ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருக்கும். அதை நோக்கி தான் மக்கள் செல்வார்கள் என நடிகர் அஜித் 2009 ஆம் ஆண்டு இந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.