AFG vs AUS: இந்த உலகக்கோப்பையில் எந்த அணியும் செய்யாத சாதனையை செய்த ஆப்கன் துவக்க ஜோடி
பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கிரிக்கெட் உலகை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமே ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஜோடி தான். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். அதுவே ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு வழி வகுத்தது.
இந்த போட்டி நடந்த கிங்ஸ்டவுன் மைதானத்தில் கடந்த இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் சராசரியாக 127 ரன்கள் தான் எடுக்கப்பட்டு இருந்தது. அந்த அளவுக்கு பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்த கடினமான பிட்ச்சில் ரஹ்மானுள்ள குர்பாஸ் மற்றும் இப்ராஹீம் சத்ரான் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் விக்கெட்டை எடுக்க முடியாமல் 16வது ஓவர் வரை திணறிய ஆஸ்திரேலிய வீரர்கள் அப்போதே மனம் துவண்டு போனார்கள். அங்கிருந்தே ஆஸ்திரேலிய அணியின் சரிவு தொடங்கியது.

முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை இந்த ஜோடி உடைத்தது. இதுவரை ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக முறை 100 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் இருவரும் செய்தனர். இந்த உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் மூன்று முறை 100 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக சேர்த்து இந்த சாதனையை செய்துள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி ஒரே டி20 உலக கோப்பையில் மூன்று முறை 100 ரன்களுக்கும் மேல் எடுத்திருந்தது. அந்த சாதனையை முறியடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 உலக கோப்பையில் மூன்றாவது அதிகபட்ச கூட்டணியை அமைத்து இருக்கின்றனர்.
மேலும், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை வேறு எந்த அணியின் துவக்க ஜோடியும் 100 ரன்களுக்கு கூட்டணி அமைக்கவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் அணியின் இந்த ஜோடி மூன்று முறை நூறு ரன்களுக்கும் மேல் சேர்த்து மற்ற அணிகளின் துவக்க வீரர்களுக்கு பாடம் எடுத்துள்ளனர்.
இந்த போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 49 பந்துகளில் 60 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 48 பந்துகளில் 51 ரன்களும் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணி 148 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு சிக்கலாக மாறி உள்ளது.


Click it and Unblock the Notifications