ஆப்கானிஸ்தான் ஃபிராடு வேலை செய்து ஜெயித்ததா? ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா புகார்.. என்ன நடந்தது?
கிங்ஸ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாதின் நயிப் ஏமாற்று வேலை செய்ததாக ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா சூசகமாக குற்றம் சாட்டி இருக்கிறார்.
முன்னதாக சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது. அதனால், ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டது.. அடுத்த போட்டியில் வங்கதேச அணியை, ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும் என்ற நிலை இருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 115 ரன்கள் எடுத்தது.

அடுத்து வங்கதேசம் 116 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங் செய்த போது இடையிடையே சிறிது நேரம் மழை பெய்தது. மூன்று முறை மழையால் வங்கதேச அணியின் பேட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது முறை மழை பெய்த போது டிஎல்எஸ் விதிப்படி ஆப்கானிஸ்தான் அணி மூன்று ரன்கள் முன்னிலையில் இருந்தது. அப்போது மழையால் போட்டி கைவிடப்பட்டு இருந்தால் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன்னில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கும்.
அதற்காக, ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் ஒரு வேலையை செய்தார். 11.4 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட நிலையில், மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. வங்கதேச அணி 81 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இருந்தது. அப்போது டிஎல்எஸ் முறைப்படி ஆப்கானிஸ்தான் அணி மூன்று ரன்கள் முன்னிலையில் இருந்தது.
அதனால், ஃபீல்டிங் நின்றிருந்த ஆப்கானிஸ்தான் வீரர்களை பார்த்து ஜொனாதன் ட்ராட், "ஏதாவது செய்து போட்டியை தாமதம் செய்யுங்கள். மழை வரப்போகிறது. மூன்று ரன்களில் நாம் முன்னிலையில் இருக்கிறோம்" என சைகை செய்தார். அவரது சைகையை ஸ்லிப் ஃபீல்டிங்கில் நின்றிருந்த குல்பாதின் பார்த்துவிட்டார். பயிற்சியாளர் சொல்வதை உடனே செய்ய வேண்டும் என பதற்றம் அடைந்த அவர், தன் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது போல கீழே சாய்ந்தார்.
அதனால், போட்டி சில நிமிடங்கள் தாமதம் ஆனது. எதிர்பார்த்தது போலவே அடுத்து மழை வந்ததால் போட்டி சில நிமிடங்கள் தடைப்பட்டது. அதன் பின் போட்டி மீண்டும் தொடங்கியது. வங்கதேச அணி ஏற்கனவே 7 விக்கெட் இழந்து இருந்த நிலையில் துவக்க வீரர் லிட்டன் தாஸ் மட்டுமே அரை சதம் அடித்து அதிரடியாக ஆடி வந்தார். எனினும், மறுபுறம் வங்கதேசத்தின் விக்கெட்களை வீழ்த்திக் கொண்டே வந்தது ஆப்கானிஸ்தான். சரியாக 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். 105 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேசம். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின் தன் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக கூறிய குல்பாதின் மின்னல் வேகத்தில் மைதானத்தை சுற்றி ஓடி வந்து வெற்றியை கொண்டாடினார். அதன் பின், ஆப்கானிஸ்தான அணியின் பேருந்தில் ஏறி குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோக்களை எல்லாம் சமூக வலைதளங்களில் பகிர்ந்த ரசிகர்கள் குல்பாதின் நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும் என கிண்டல் செய்து வந்தனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா குல்பாதின் காலில் தசைப் பிடிப்பு இருப்பது போல கீழே விழும் புகைப்படத்தை பகிர்ந்து, "பழைய மழை" என சூசகமாக அவரது தசை பிடிப்பு ஏமாற்று வேலை என கூறி இருக்கிறார். இதனால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆப்கானிஸ்தான் அணி மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Story first published: Tuesday, June 25, 2024, 18:07 [IST]
Other articles published on Jun 25, 2024


Click it and Unblock the Notifications