ஷார்ஜா: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா அணி ஐக்கிய அரபு அமீரக நாடுக்கு வந்து இருக்கிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி சார்ஜாவில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் மிகவும் தொய்வாக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பவுலர்களின் அபாரமான செயல்பாட்டை தாக்குப் பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சீட்டுக்கட்டு கோபுரம் சரிவது போல் தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடக்க வீரராக களம் இறங்கிய ரிசா ஹென்றிக்ஸ் 9 ரன்களில் பரூக்கி பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனை அடுத்து கேப்டன் மார்க்கரம் இரண்டு ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதைப் போன்று மற்றொரு தொடக்க வீரரான ஆட்டம் இழந்தார். அதேபோன்று டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் மற்றும் ஜேசன்ஸ்மித் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.
தென்னாபிரிக்க அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கெயில் வெர்ரையன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று ஆண்டில் பெலுக்வாயோரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 36 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தென்னாப்பிரிக்க அணி ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 69 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. இதனால் அதனை விட நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா குறைந்த ரன்கள் மட்டுமே எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வியான் முல்டர் பொறுப்புடன் விளையாடி தென்னாப்பிரிக்க அணியை சரிவிலிருந்து மீட்டார்.
84 பந்துகள் எதிர்கொண்ட வியான் முல்டர் 52 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு துணை நிற்கவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்கள் எல்லாம் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் பரூக்கி நான்கு விக்கெட்டுகளையும் கசான்ஃபார் மூன்று விக்கெட்டுகளும், ரஷீத் கான் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ரஹமனுல்லா குர்பாஸ் டக் அவுட் ஆகியும், ரஹ்மத் ஷா 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அதேபோன்று ரியாஸ் ஹாசன் 16 ரன்கள் சேர்க்க ஆப்கானிஸ்தான் அணி 38 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் கேப்டன் ஹஸ்மதுல்லாஹ் 16 ரன்கள் எடுக்க அஸ்மதுல்லாஹ் உமர்சாய் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் குலாப்தீன் 27 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். இதில் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 26 ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணியை முதல் முறையாக வீழ்த்தி இருக்கிறது. இதன் மூலம் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை,நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை கடந்த பத்து மாதத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும. இந்த போட்டியை ஃபேன் கோடு ஆப்பில் பார்க்கலாம்.