AFG vs SL : மலிங்கா ஜெயிச்சு இம்புட்டு நாளாச்சா? இலங்கை - ஆப்கன் போட்டியின் சாதனைகள்!
Recommended Video
கார்டிப் : 2019 உலகக்கோப்பை தொடரில் நடந்த ஏழாவது லீக் போட்டியில் ஆப்கனிஸ்தான் அணியை டிஎல்எஸ் விதிப்படி 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.
இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது மழை பெய்தது. இதை அடுத்து, போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணி மோசமாக பேட்டிங் ஆடி 36.5 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடித்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் பல்வேறு சாதனைகள், மைல்கல்கள் எட்டப்பட்டன. இலங்கை வீரர் லாஹிரு திரிமன்னே 25 ரன்கள் எடுத்தார். அவர் 6 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக 3000 ரன்கள் அடித்து, புதிய மைல்கல்லை கடந்தார். அவர் 100 இன்னிங்க்ஸ்களில், இந்த மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ் நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனார். இது உலகக்கோப்பை போட்டிகளில் ஏஞ்சலோ மாத்யூஸ்-இன் மூன்றாவது டக் அவுட் ஆகும். மேலும், தொடர்ந்து இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் டக் அவுட் ஆன நான்காவது இலங்கை பேட்ஸ்மேன் என்ற சோக சாதனையையும் செய்தார்.
ஆப்கானிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நபி 30 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இதுவே சிறந்த பந்துவீச்சு ஆகும். 2015 உலகக்கோப்பை தொடரில் ஷபூர் சத்ரான் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்கள் எடுத்து இருந்ததே முந்தைய சிறந்த பந்துவீச்சு ஆகும்.
இலங்கை பந்துவீச்சாளர் நுவான் பிரதீப்பும் நேற்று நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். அவர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 4+ விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும், இந்த சாதனையை செய்யும் ஒன்பதாவது இலங்கை வீரர் ஆவார்.
சர்வதேச போட்டியில் இலங்கை அணியின் வெற்றியில் சுமார் 687 நாட்களுக்குப் பின் பங்கேற்றுள்ளார் லசித் மலிங்கா. இந்த இடைவெளியில் மலிங்கா இலங்கை அணிக்காக 22 ஒருநாள் போட்டிகள், 6 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால், எதிலும் இலங்கை அணி வெற்றி பெறவில்லை. அந்த குறையை போக்கியுள்ளது இந்தப் போட்டியில் கிடைத்த வெற்றி.
மேலும், மலிங்கா உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அவர் 24 உலகக்கோப்பை போட்டிகளில் 46 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். மெக்கிராத் 71, முத்தையா முரளிதரன் 68, வாசிம் அக்ரம் 55, சமிந்தா வாஸ் 49 விக்கெட்கள் வீழ்த்தி, முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications