7 சிக்ஸ் 7 ஃபோர்.. அதிவேக செஞ்சுரி.. கதிகலங்க வைத்த ஆப்கன் வீரர் குர்பாஸ்.. கதறிய UAE
ஷார்ஜா : ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக 50 பந்துகளில் சதம் அடித்தார். 7 ஃபோர், 7 சிக்ஸ் அடித்து பந்து வீசிய ஐக்கிய அரபு அணியை கதிகலங்க வைத்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, அங்கே டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஹஸ்மத்துல்லா ஜஜாய் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், அடுத்து வந்த இப்ராகிம் சத்ரானுடன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார்.
முதலில் நிதானமாக ரன் சேர்த்த இந்த ஜோடி குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் எளிதாக பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டை எகிற வைத்தது. சத்ரான் 43 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். ஆனால், குர்பாஸ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து மிரட்டினார்.
சரியாக 50 பந்துகளில் 100 ரன்களை கடந்து சதம் அடித்தார். ஏழு ஃபோர், ஏழு சிக்ஸ் அடித்து இருந்தார். அவர் கூட சிக்ஸ் அடித்து தான் சதத்தை அடித்து இருந்தார். அதன் பின் 52 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த நிலையில் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆடிய ஆட்டத்தால் கத்துக்குட்டி அணியான ஐக்கிய அரபு அமீரகம் கதிகலங்கிப் போனது. இதில் வேடிக்கை என்னவென்றால், குர்பாஸ் ஆட்டமிழந்த பின் பேட்டிங் ஆட வந்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் அவரை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்ததுதான்.
ஓமர்சாய் 8 பந்துகளில் 19 ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை எட்ட வைத்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications