ஆசிய கோப்பை நடக்கும் போது ஸ்பாட் பிக்ஸிங் அழைப்பு.. ஆப்கன் வீரர் ஐசிசி-யிடம் புகார்
துபாய் : ஆசிய கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், ஆப்கன் வீரர் ஒருவர் தன்னை சிலர் ஸ்பாட் பிக்ஸிங் செய்யுமாறு அணுகினார்கள் என கூறியுள்ளார்.
ஸ்பாட் பிக்ஸிங் புகார்கள் சமீப காலங்களில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, டி20 தொடர்கள் அதிகரித்து வரும் நிலையில், அதில் நிறைய ஸ்பாட் பிக்ஸிங் நடப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
அது போலவே, ஒரு டி20 தொடரில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ய ஆப்கன் வீரர் முஹம்மது ஷாசாத்-ஐ ஒருவர் அணுகியுள்ளார். இது தொடர்பாக ஐசிசியிடம் புகார் அளித்துள்ளார் அவர்.

ஆப்கன் பிரீமியர் டி2௦ லீக்
ஆப்கன் பிரீமியர் டி2௦ லீக் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் ஷார்ஜாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஷாசாத் பங்கேற்க உள்ளார். அவர் ஆப்கன் அணியின் முக்கிய வீரராக இருக்கிறார். விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் என்ற இடத்தை நிரப்பி வருகிறார். அந்த தொடரில் ஐபிஎல் போலவே, பல நாட்டு நட்சத்திர வீரர்களும் பங்கு பெற இருக்கிறார்கள்.

ஐசிசியிடம் புகார்
ஆசிய கோப்பை தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடர் முடிந்த உடன் ஆப்கன் பிரீமியர் லீக் டி20 தொடர் தொடங்க உள்ளது. அதில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ய முஹம்மது ஷாசாத்-ஐ அணுகி உள்ளனர். அவர் இதை உடனடியாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கூறியுள்ளார். அவர்கள் ஐசிசி குற்றத் தடுப்பு பிரிவிற்கு புகார் அளித்துள்ளார்கள்.

எதையும் விடுவதில்லை
எந்த தொடரையும் விடாமல் பெட் கட்டி வருகிறார்கள் என்பதும், அதற்காக வீரர்களை அணுகி போட்டியை பிக்ஸிங் செய்ய முயல்கிறார்கள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது. ஐசிசி இந்த வருடம் மட்டும் ஏராளமான புகார்களை விசாரித்து வருகிறது.

இந்த ஆண்டு வந்த புகார்கள்
ஐசிசி அதிகாரி மார்ஷல் கூறுகையில், "இந்த ஆண்டு மட்டும் 32 விசாரணைகள் நடந்து வருகிறது. அதில் எட்டு வீரர்கள், ஐந்து நிர்வாகிகள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என கருதுகிறோம். ஐந்து சர்வதேச அணிகளின் கேப்டன்கள் ஸ்பாட் பிக்ஸிங் செய்ய தங்களை அணுகியதாக புகார் கூறி இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் பிக்ஸிங் பிரச்சனைக்கு இப்போதைக்கு முடிவில்லை என்பது மட்டும் புரிகிறது.


Click it and Unblock the Notifications