காபூல் : ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்களுக்கு எதிராக அந்நாட்டு நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் குரல் கொடுத்து பெண் கல்விக்கு ஆதரவாக பேசியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாலிபான்கள் ஆட்சி அமைத்தார்கள்.
தாலிபான் ஆட்சியில் பெண்கள் மருத்துவத் துறை தொடர்பாக படிக்க தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை எதிர்த்து ரஷீத் கான் குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு ஆண்கள் மற்றும் பெண்களின் அடிப்படை கடமை என இஸ்லாம் கூறுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவப் படிப்புகள் மற்றும் இதர படிப்புகளில் சேரக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகி இருப்பது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. பல பெண்களும் சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக தங்கள் கண்ணீரை வெளிப்படுத்தி வருவதை பார்க்கும் போது மனது வலிக்கின்றது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான விஷயமே கல்விதான். அதுவும் எங்களுடைய சகோதரிகளுக்கு கல்வி கற்க உரிமை இருக்கிறது. பெண்களால் அனைத்து துறையிலும் சேவையாற்ற முடியும். இதனால் தாலிபான்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் பெண்களுக்கு கல்வி கொடுப்பது என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும்.
இஸ்லாமின் போதனைகளிலும் கல்வி முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் கல்வி கற்க வழிகளை ஏற்படுத்த வேண்டும். ஆண்களும், பெண்களும் கல்வி கற்க வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை குர்ஆனும் போதிக்கிறது. இந்த சூழ்நிலையில் பெண்களுக்கான மருத்துவ கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இது நிச்சயம் நமது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். தற்போது நமது நாடு மிகப்பெரிய இக்கட்டான ஒரு நிலையில் இருக்கின்றது. நமது நாட்டில் ஒவ்வொரு துறையிலும் நிபுணர்கள் தேவை. குறிப்பாக மருத்துவத் துறையில் பெண்களின் சேவை வேண்டும். மருத்துவத் துறையில் ஏற்கனவே பெண் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் குறைவாக இருப்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
பெண் மருத்துவர்கள் இல்லையென்றால் அது மறைமுகமாக பெண்களை தான் பாதிக்கும். நமது சகோதரி, தாய்மார்களால் பெண் மருத்துவர்களிடம் தங்களுடைய குறையை சொல்லி புரிய வைக்க முடியும். எனவே தாலிபான்கள் தங்களுடைய தடையை மறுபரிசீலினை செய்து பெண்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களையும் பங்காற்ற முன்னுரிமை வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வியை கொடுப்பது என்பது சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, அது நமது மார்க்கத்திலும் கண்டிப்பான ஒரு விஷயமாக கருதப்படுகிறது என்று ரசித் கான் கூறியுள்ளார்.