டெல்லி : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது கிரிக்கெட்டை விட கிரிக்கெட் அல்லாத சர்ச்சைகள் தான் அதிக அளவில் நடந்து வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியில் ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய்ஸ்ரீராம் என கத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பொதுவான ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் பாகிஸ்தானுக்கு மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் ட்ரெண்டெல்லாம் செய்தார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான போட்டியில் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தை அதிக அளவு பயன்படுத்தப்பட்டது.

டெல்லியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீசியது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் எல்லாம் 215 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை அதிக அளவு பயன்படுத்தினர். ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா டாசின் போது பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு தான் பேச தொடங்கினார்.அதன் பிறகு ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆட்ட நாயகன் விருது வென்ற முஜிபுர் ரஹ்மான் தனது பேச்சை தொடங்கும் போது பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
அதன் பிறகு இந்த பேச்சை மொழியாக்கம் செய்த ரஷீத் காணும் பிஸ்மில்லாஹ் என்ற சொல் பயன்படுத்தி தான் தொடங்கினார். குறிப்பாக இஸ்லாமிய மக்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் போது பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். எனினும் ஜெய் ஸ்ரீ ராம் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தை தற்போது ரசிகர்களால் அதிக அளவு கவனிக்கப்பட்டது.
ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்திற்கு ஆதரவாக பேசும் ரசிகர்கள், இன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் பிஸ்மில்லாஹ் என்று சொல்லுவதற்கு ஏன் நீங்கள் எதிர்ப்பு தரவில்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். எனினும் டெல்லி ரசிகர்கள் பலரும் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்காக ஆதரவு குரல் கொடுத்தார்கள். அவர்கள் எந்த ஒரு மதரீதியான கோஷத்தையும் அகமதாபாத் ரசிகர்கள் போல் எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.