பாகிஸ்தானை இந்தியா தட்டி கேட்க வேண்டும்.. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஆப்கான் கிரிக்கெட் வீரர் கண்டனம்
காபூலில் உள்ள மருத்துவமனை மீதான பாகிஸ்தானின் தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அல்லாஹ் கசன்ஃபர் சர்வதேச சமூகத்திற்கு உணர்வுபூர்வமான செய்தியை விடுத்துள்ளார். பாகிஸ்தான் நடத்திய கொடூரமான விமானத் தாக்குதலில், குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டு 250 பேர் காயமடைந்தனர். இரு நாடுகளின் மோதலின் தீவிர வெளிப்பாடே இத்தாக்குதல் ஆகும்.
ஆப்கானிஸ்தானின் துணை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனையைத் தாக்கி, அதன் பெரும்பகுதியை விமானத் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் இக்குற்றச்சாட்டுகளை மறுத்தது. இத்தாக்குதல்கள் பொதுமக்களுக்குப் பேரழிவு தரும் என கசன்ஃபர் கவலை தெரிவித்தார். இது குறித்து பேசிய கசன்ஃபர் "அங்கு சிகிச்சைக்குப் பணம் இல்லாத மக்கள் இருக்கிறார்கள். இப்போது அந்த இடத்தையும் தாக்கிவிட்டார்கள். அந்த மக்களைக் கொன்றுவிட்டார்கள். இது ஆப்கானிஸ்தானால் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றார்.
தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த கசன்ஃபர், இராணுவத் தாக்குதலின் நோக்கத்தைக் கேள்வி எழுப்பினார். "அவர்கள் என்ன நிரூபிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாதாரண மக்களைக் குறிவைத்து தாக்கும் இதை சகித்துக் கொள்ள முடியாது. ஆப்கானிஸ்தான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றும் அவர் பேட்டியில் குறிப்பிட்டார்.
"ஆப்கானிஸ்தானின் வரலாறு அனைவருக்கும் தெரியும்," என எச்சரித்த அவர், "அந்த வரலாறு மீண்டும் நடந்தால், அது பாகிஸ்தானுக்கு மிக மோசமாக அமையும்" என்றார். 2026 ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள கசன்ஃபர், சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுத்தார்.
இந்தியா, ஆப்கானிஸ்தானின் "நெருங்கிய நண்பன்" என்று கசன்ஃபர் தெரிவித்தார். "இந்தியாவுடன் பேசி, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க விரும்புகிறோம். இது மற்ற நாடுகளுக்கும் வேண்டுகோள். உலகம் பல சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த மோதல் யாருக்கும் நல்லதல்ல" என அவர் எச்சரிக்கை விடுத்தார்.


Click it and Unblock the Notifications