Points table: மேல ஏறி வாரோம், ஒதுங்கி நில்லு.. எஸ்கலேட்டரில் ஆப்கான்.. இடியாப்ப சிக்கலில் பாகிஸ்தான்
சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 286 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக பாகிஸ்தான் அணியை ஆஃப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பின் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்து ஆஃப்கான் வீரர்கள் ரசிகர்கள் நன்றி கூறினர். ஏற்கனவே இங்கிலாந்து அணியை வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான், தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி இருக்கிறது.
இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தாலும் பாகிஸ்தான் அணி 5வது இடத்தில் நீடிக்கிறது. கடைசி இடத்தில் இருந்த ஆஃப்கானிஸ்தான் அணியின் அபார எழுச்சியால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேல் இலங்கை அணி 9வது இடத்திலும், நெதர்லாந்து அணி 8வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் இந்திய அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் வெற்றிபெற்று முதலிடத்தில் உள்ளது. இந்திய அணிக்கு பின் நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி 6 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 4வது இடத்திலும் உள்ளனர். ஆஃப்கானிஸ்தான் அணி முன்னணி அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி வருவது உலகக்கோப்பை தொடரை கூடுதல் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஒன்றாக ஆஃப்கானிஸ்தான் அணி உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடன் 4 புள்ளிகள் பெற்றிருப்பதால், 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கென்யா அரையிறுதிக்கு முன்னேறியதை போல் ஆஃப்கானிஸ்தான் அணியும் முன்னேற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது


Click it and Unblock the Notifications