சொதப்பிய ஆஃப்கான் பேட்ஸ்மேன்கள்.. இதெல்லாம் ஒரு இலக்கா.. இங்கிலாந்துக்கு அல்வா சாப்பிடுற மாதிரி!
டெல்லி: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு 285 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 13வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். டெல்லி மைதானத்தில் நடைபெறும் போட்டி என்பதால், சேஸிங்கிற்கு சாதகமானது என்பதால் இம்முடிவை இங்கிலாந்து அணி எடுத்தது. இதனை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் - ஜத்ரான் கூட்டணி களமிறங்கியது.

இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் முதல் ஓவரை வீசினார். முதல் 2 ஓவர்கள் நிதானம் காத்த குர்பாஸ், 3வது ஓவரிலேயே சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசி அதிரடிக்கு திரும்பினார். தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசப்பட, பின்னர் டாப்லி வீசிய 6வது ஓவரிலும் 2 பவுண்டரிகள் விளாசப்பட்டது. இதனால் 7 ஓவரிகளிலேயே ஆஃப்கானிஸ்தான் அணி 50 ரன்கள் கடந்த நிலையில், சாம் கரண் வீசிய 8வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் விளாசப்பட்டது. இதன் காரணமாக அதிரடி வீரர் குர்பாஸ் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில், தொடக்க வீரர் ஜத்ரான் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா 3 ரன்களிலும், குர்பாஸ் 80 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 122 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆஃப்கானிஸ்தான் அணி தவித்தது. பின்னர் வந்த வீரர்களில் அஸ்மத்துல்லா 19 ரன்களும், கேப்டன் ஷாகிதி 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி விரைந்து ஆல் அவுட் செய்யலாம் என்ற உற்சாகத்தில் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக அட்டாக் செய்தனர்.
ஆனால் ஒரு பக்கம் விக்கெட்டை காப்பாற்றி நின்ற இக்ரம் நிதானமாக விளையாட, எதிர்முனையில் வந்த ரஷீத் கான் 23 ரன்களும், முஜீப் உர் ரஹ்மான் 16 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய இம்ரன் 66 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஃப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆடில் ரஷீத் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications