AFG vs UGA: 125 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. கத்துக்குட்டி டீமை கலங்க வைத்த ஆப்கானிஸ்தான்
பிராவிடன்ஸ் : கத்துக்குட்டி அணியான உகாண்டாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான் அணி. அந்த அணியின் ஃபாசல்ஹக் ஃபரூக்கி 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 76 ரன்களும், இப்ராஹீம் சத்ரான் 70 ரன்களும் குவித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் ஆட்டமிழந்த பின் ஆப்கானிஸ்தான் அணி சரிவை சந்தித்தது.

முதல் 14 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து இருந்தது ஆப்கானிஸ்தான். எப்படியும் 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஆறு ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்களை இழந்தது. இதை அடுத்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டும் எடுத்தது ஆப்கானிஸ்தான்.
அடுத்த ஆடிய உகாண்டா அணி பேட்டிங் செய்யத் திணறியது. அந்த அணி 16 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதை அடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இது அந்த அணியின் இரண்டாவது மிகப்பெரிய உலகக் கோப்பை வெற்றி ஆகும்.
முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது உகாண்டா அணிக்கு எதிராக 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. உகாண்டா அணி 58 இடங்களில் ஆல் அவுட் ஆன நிலையில் இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நான்காவது மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும்.


Click it and Unblock the Notifications