நெதர்லாந்தை பந்தாடிய ஆஃப்கான்.. அரையிறுதிக்கு அருகில் வந்துட்டாங்க.. பரிதாப நிலையில் பாகிஸ்தான்!
லக்னோ: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் எட்வர்ட்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சிறப்பாக ஆடி வந்தது. ஆனால் அடுத்த 6 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் காரணமாக நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய சைபிரண்ட் 58 ரன்கள் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நெதர்லாந்து அணி 4 வீரர்கள் அவசரப்பட்டு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததே அந்த அணிக்கு பின்னடைவாக மாறியது.
இதன் பின் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் - ஜத்ரான் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், குர்பாஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான ஜத்ரான் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 55 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. இதன்பின் வந்த ரஹ்மத் ஷா - கேப்டன் ஷாகிதி கூட்டணி ஆஃப்கானிஸ்தான் அணியின் ரன் குவிப்பை வேகப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா அரைசதம் விளாசி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ஷாகிதி - ஒமர்சாய் கூட்டணி அதிரடியாக விளையாடியது. சிறப்பாக ஆடிய ஷாகிதி உலகக்கோப்பை தொடரில் 3வது அரைசதத்தை விளாசினார்.
இதன்பின் இறுதியாக 31.3 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. கடைசி வரை களத்தில் இருந்த ஷாகிதி 56 ரன்களும், ஒமர்சாய் 31 ரன்களும் விளாசினர். இந்த வெற்றியின் மூலமாக ஆஃப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆஃப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்றுள்ளதால், அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வென்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications