மொத்தமாக 8 டி20 போட்டி.. ஆகஸ்டில் அதிரடி தான் போல.. அயர்லாந்து - இந்தியா தொடருக்கான அட்டவணை வெளியீடு
டப்ளின்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு பின், அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய வீரர்கள் ஒரு மாத ஓய்வில் இருக்கிறார்கள். இந்த ஓய்வின் போது வீரர்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு பறந்துள்ளனர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணையை ஏற்கனவே இந்திய அணி வெளியிட்டதோடு, இந்திய வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெளியிட்டது. அக்.5ஆம் தேதி உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், நவ.19ஆம் தேதி உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், அதற்கு முன் இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் விளையாட போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அடுத்த 5வது நாளில் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தமாக 8 டி20 போட்டிகளில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அயர்லாந்து டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் டப்ளின் மைதானத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடக்கவுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட உள்ள வீரர்களே பெரும்பாலும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


Click it and Unblock the Notifications