பொளந்து கட்டிய யாஷ் துல்.. தங்க உண்டியல தகர டப்பானு நினைச்சிருக்காங்க.. DC-யை பொளக்கும் ரசிகர்கள்!
கொழும்பு: ஐக்கிய அரபு அமீரக ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ACC Emerging Players எனப்படும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஐக்கிய அமீரக அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு 175 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் துலீப் டிராபி தொடரில் அசத்திய ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி மற்றும் மனவ் துதர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின்னர் இந்திய அணி தரப்பில் சாய் சுதர்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இதில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்டந்து அபிஷேக் சர்மாவும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, நிகின் ஜோஸ் - கேப்டன் யாஷ் துல் கூட்டணி களமிறங்கியது. இதில் நிகின் ஜோஸ் நிதானமாக விளையாட, கேப்டன் யாஷ் துல் அதிரடியாக ஆடினார். சிறப்பாக ஆடிய யாஷ் துல் சதம் விளாசி அசத்தினர். இறுதிவரை ஆடிய அவர் 20 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 84 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக இந்திய அணி 26.3 ஓவர்களில் இலக்கை எட்டியது.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட யாஷ் துல் வெறும் 3 இன்னிங்ஸ்களில் மட்டுமே களமிறக்கப்பட்டார். இருப்பினும் இந்திய ஏ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு நியாயம் சேர்த்துள்ளார். அதேபோல் டெல்லி அணியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications