லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோற்ற அணியின் கேப்டன் மட்டுமின்றி வெற்றி பெற்ற அணியின் கேப்டனும் கண்ணீர் சிந்தியது பார்வையாளர்களை உருக்கியது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நடுவேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர், அவ்விரு அணிகளுக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு இணையானது. பாரம்பரியம் மிக்கது. எனவே இந்த தொடரின் வெற்றி, தோல்விகள் இரு அணிகளையும் வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டது.

தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆஷஸ் தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்துவிட்டது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
4வது டெஸ்ட் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் கிளார்க் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார். இரு நாட்கள் முன்புதான், டெஸ்ட் போட்டியில் ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என்று, கிளார்க் கூறியிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் தோல்வி மற்றும் அவரது பேட்டிங் சொதப்பல் போன்ற காரணங்களால் திடீரென இம்முடிவை கிளார்க் எடுத்ததாக கூறப்படுகிறது.
கிளார்க் கூறியதாவது: ஆஸ்திரேலிய அணி அதைவிட திறமையாக ஆடிய ஒரு அணியிடம் தோற்றுள்ளது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியுடன் எனது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வரும்.
இந்த தொடரில் மட்டுமல்ல கடந்த 12 மாத காலமாகவே எனது ஆட்டத்திறன் மீது எனக்கே திருப்தியில்லை. இவ்வாறு கிளார்க் கூறியபோது, அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது. டெலிவிஷன் முன்பு அழுவது எனது வீக்னஸ் என்று கிளார்க் கூறிவிட்டு கிளம்பினார்.
இதையடுத்து வெற்றி பெற்ற அணியின் கேப்டனான அலிஸ்டர் குக் பேச வந்தார். அவரும் ரெஸ்ட்லெசாக, எமோஷனலாகவே காட்சியளித்தார். அவர் கூறுகையில், "நாங்கள் இப்போது வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நம்புவதற்கே எனக்கு சிரமமாக உள்ளது (கடந்த தொடரில் இங்கிலாந்து ஓயிட்வாஷ் ஆகியிருந்தது).
இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளர் பீட்டர் மூரேசின் சிரமத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. மைக்கேல் கிளார்க் ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிந்ததும், கலக்கமாக உள்ளது. இவ்வாறு குக் பேசிக்கொண்டிருந்தபேதே, கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால், இது ஆனந்தக் கண்ணீர் என்பதை ரசிகர்கள் அறிந்தனர். எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.