கடைசி 10 ஓவரில் 94 ரன்கள்.. சாதனை படைத்த நியூசி.. மொத்தமாக 46 பவுண்டரி.. பரிதாப நிலையில் பாகிஸ்தான்!
பெங்களூரு: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதற்கு 402 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35வது லீக் போட்டியில் வலிமை வாய்ந்த அணிகளான பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங், ஹென்ரி மற்றும் நீஷம் நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன், மார்க் சாப்மான் மற்றும் இஷ் சோதி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து டெவான் கான்வே - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கான்வே 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் ரச்சின் - வில்லியம்சன் கூட்டணி இணைந்து பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து கட்டியது. காயத்திற்கு பின் திரும்பிய கேன் வில்லியம்சன் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். இதனால் 25 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை சேர்த்தது.
சிறப்பாக ஆடிய கேன் வில்லியம்சன் 49 பந்துகளில் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பின் இருவரும் அதிரடியில் களமிறங்க நியூசிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. 33 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 240ஆக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா 88 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இன்னொரு பக்கம் கேன் வில்லியம்சனும் சதம் விளாசுவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், 95 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து சதம் விளாசிய ரச்சின் 108 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த டேரில் மிட்செல் 29 ரன்களிலும், அதிரடியாக ஆடிய சாப்மேன் 39 ரன்களிலும் வெளியேறினர். இதனிடையே 40 ஓவர்கள் முடிவிலேயே நியூசிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. இதனால் நியூசிலாந்து அணி கடைசி நேரத்தில் 400 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசி தள்ளினார்.
சிறப்பாக ஆடிய அவர் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், கடைசி நேரத்தில் சிக்சர்களை விளாசி மிட்செல் சான்ட்னர் நியூசிலாந்து அணியை 400 ரன்களை தொட வைத்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 401 ரன்கள் சேர்த்தது. உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி முதல்முறையாக 400 ரன்களை கடந்தது. அதேபோல் கடைசி 5 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி 54 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications