ஐசிசி தரவரிசை.. டாப் 10ல் ஒரேயொரு இந்திய பேட்ஸ்மேன்.. ஜோ ரூட் முதலிடம்.. விராட் கோலிக்கு எந்த இடம்?
துபாய்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் மூன்று இடங்களில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரிவை சந்தித்துள்ளனர்.
ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் லபுஷேன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் மூன்றாம் இடத்திலும் இருந்தனர். ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்திருந்தது இதுவே முதல்முறையாக அமைந்தது.

அதுமட்டுமல்லாமல் லபுஷேன் ஆட்டமிழந்தால் ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தால் டிராவிஸ் ஹெட் என்றும் அடுத்தடுத்து களமிறங்கினர். ஆனால் இவர்கள் மூவருமே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் ஐசிசி தரப்பில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெளியாகியுள்ளது.
அதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் வில்லியம்சன் இரண்டாமிடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இருந்த லபுஷேன் மூன்றாமிடத்திலும், 3வது இடத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் இரு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்தில் இருந்து சரிந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணி தரப்பில் முதல் இன்னிங்ஸில் சதமும், 2வது இன்னிங்ஸில் அரைசதம் விளாசிய உஸ்மான் கவாஜா 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணி தரப்பில் விபத்தில் காயமடைந்து ஓய்வில் உள்ள ரிஷப் பண்ட் மட்டும் 10வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து ரோகித் சர்மா 12வது இடத்திலும், 13வது இடத்தில் இருந்த விராட் கோலி 14வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை முதலிடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீடிக்கிறார். அதேபோல் பும்ரா 8வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications