உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல்முறை.. புள்ளிப்பட்டியலில் நடந்த மாற்றம்.. சிக்கலில் இலங்கை, வங்கதேசம்!
புனே: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதன் மூலமாக புள்ளிப்பட்டியல் நிகழ்ந்த மாற்றங்களை பார்க்கலாம்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும், டேவிட் மலான் 87 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும் விளாசினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக தேஜா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், கேப்டன் எட்வர்ட்ஸ் 38 ரன்களும் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர்களான மொயின் அலி மற்றும் ரஷீத் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக அனைத்து அணிகளும் 2 போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.இதன் மூலம் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தகுதிபெற டாப் 7 இடங்களில் இங்கிலாந்து அணி இடம்பிடிக்க வேண்டும்.
இதனால் இங்கிலாந்து அணி அடுத்த போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி கனவு மெய்ப்பட வாய்ப்புகள் உள்ளது. இங்கிலாந்து அணியின் எழுச்சி காரணமாக வங்கதேசம் அணி 8வது இடத்திற்கும், இலங்கை அணி 9வது இடத்திற்கும், நெதர்லாந்து அணி கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் நெதர்லாந்து அணியும் அதிகாரப்பூர்வமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
இதன் காரணமாக அரையிறுதி சுற்றுக்கான கடைசி இடத்தை பிடிக்க நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தீவிரமாகியுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடனும், நியூசிலாந்து அணி இலங்கை அணியை எதிர்த்தும் விளையாடவுள்ளது. இதனால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெறவுள்ள அணிகளுக்கு இடையிலான போட்டியும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications