தவானின் கனவு பலிக்காது.. நன்றாக ஆடினாலும் உலகக்கோப்பையில் வாய்ப்பில்லை..காரணத்தை புட்டுவைத்த அகர்கர்
மும்பை: இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் ஷிகர் தவானுக்கு டி20 உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.
Recommended Video
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த தொடர் கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பிசிசிஐ போட்ட திட்டம்
இந்த தொடருக்காக தயாராகும் பணிகளில் பிசிசிஐ தற்போது இருந்தே தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதன்படி வீரர்களின் ஃபார்மை தெரிந்துக்கொள்ள ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகளை உருவாக்கி இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் அனுப்பியுள்ளது. சீனியர் வீரர்கள் இங்கிலாந்திலும், ஐபிஎல்-லில் கலக்கிய இளம் வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்திலும் பங்குபெற்றுள்ளனர். இந்த இரு தொடர்களுமே டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வில் முக்கிய பங்காற்றவிருக்கிறது.

நட்சத்திர வீரர்கள்
ஹர்திக், ஷிகர் தவான், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் இந்திய அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் உள்ளனர். எனவே இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வாய்ப்பு இல்லை
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 6 போட்டிகளிலும் தவான் சிறப்பாக செயல்பட்டாலும், உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஓப்பனிங் இடத்தை பிடிப்பது மிகவும் கடினமான ரேஸாக இருக்கப்போகிறது. இந்தியாவின் ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா முதல் ஓப்பனர் என்பது உறுதியான ஒன்று. மற்றொரு ஓப்பனிங் இடத்திற்கு தவானை விட கே.எல்.ராகுல் முதன்மை தேர்வாக உள்ளார். டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் 140 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். ஆனால் தவான் 127 மட்டுமே வைத்துள்ளார்.

தவானுக்கு அட்வைஸ்
ஷிகர் தவான் இலங்கை தொடரில் முடிந்த அளவிற்கு அதிக ஸ்கோரை அடிக்க வேண்டும். அது ராகுல் மற்றும் ரோகித்தின் மீது அழுத்தத்தை கொடுக்கும். அப்படி அழுத்தம் ஏற்பட்டு சொதப்பினால் தவானுக்கு வாய்ப்புண்டு. ஒரு வீரராக அவரால் அதனை மட்டுமே செய்ய முடியும். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரும் டி20 உலகக்கோப்பையில் இடம்பெற முக்கிய தொடராக இருக்கும் என்பதால் அதிலும் தவானின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது என அகர்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications