ஒன்றரை வருடத்திற்கு பிறகு.. இங்கிலாந்து அணியில் "திடீர்" இடம்.. சாதிப்பாரா இந்திய வம்சாவளி பவுலர்?
எட்ஜ்பேஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்திய வம்சாவளி பவுலர் அஜஸ் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையே லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று (ஜூன்.10) தொடங்கியது.
காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், டாம் லாதம் கேப்டனாக செயல்படுகிறார். அதேசமயம், அந்த அணியில் 6 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வில் யங், டாம் பிளன்டல், டேரில் மிட்சல், அஜஸ் படேல், மேட் ஹென்றி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

லன்ச் வரை
இந்த நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளே களமிறங்கினர். 29 ஓவர்கள் வரை, அதாவது உணவு இடைவேளை வரை நியூசிலாந்து பவுலர்களால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை. ரோரி பர்ன்ஸ் 96 பந்துகளில் 32 ரன்களும், டோமினிக் சிப்ளே 79 பந்துகளில் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். உணவு இடைவேளை வரை அந்த அணி 67 ரன்கள் எடுத்திருந்தது.

தள்ளாடும் இங்கிலாந்து
ஆனால்,உணவு இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது இங்கிலாந்து. சிப்ளே 35 ரன்களிலும், சாக் கிராலே ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் ஜோ ரூட் 4 ரன்னிலும் வெளியேறினர். இதில், சிப்ளே மற்றும் ஜோ ரூட் ஆகியோரை மேட் ஹென்றி வெளியேற்றினார்.

இந்திய வம்சாவளி வீரர்
இந்த நிலையில், நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரர் அஜஸ் படேல் இடம் பிடித்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திற்கு பிறகு இப்போது மீண்டும் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார்.

தன்னை நிரூபிப்பார்
இந்தியாவின் மும்பையில் பிறந்த அஜஸ் படேல் 2018ம் ஆண்டு, முதன் முதலாக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்தார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் இந்த இடது கை ஆர்தடாக்ஸ் ஸ்பின்னர். கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் அவருக்கு மொத்தமாகவே 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 6 ஓவர்களே கொடுக்கப்பட்டது. இதனால், அவரால் ஒரு விக்கெட் கூட கைப்பற்ற முடியவில்லை. இப்போது ஒன்றரை வருடங்களுக்கு பிறகு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், இப்போட்டியில் அவர் நிச்சயம் தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications