எந்த இந்திய வீரரும் செய்யாத ஐபிஎல் சாதனையை செய்யப் போகும் ரஹானே, ஸ்ரேயாஸ்.. கேப்டன்சியில் வரலாறு
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த ஐபிஎல் அணி கேப்டனும் செய்யாத சாதனையை செய்ய இருக்கிறார் அஜிங்கியா ரஹானே. அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயரும் இந்த சாதனையை செய்ய இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கிறார் அஜிங்கியா ரஹானே. அவர் அந்த அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். முன்னதாக வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியான நிலையில், அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் அஜிங்கியா ரஹானே மூன்றாவது முறையாக ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். முன்னதாக அவர் 2017 ஆம் ஆண்டு ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனாக ஒரு போட்டியில் செயல்பட்டு இருந்தார். அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விலகியதால் அந்த ஒரு போட்டியில் அவர் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின் 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் ரஹானே. பின்னர் 2019 ஆம் ஆண்டு பாதியில் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரஹானே ஆடினாலும் கேப்டன் பதவியை பெறவில்லை.
இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் அடிப்படை விலைக்கு வாங்கப்பட்ட அஜிங்கியா ரஹானே அந்த அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இதன் மூலம் முதன்முறையாக ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளின் கேப்டனாக செயல்பட்ட முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் அஜிங்கியா ரஹானே.
இதே சாதனையை ஸ்ரேயாஸ் ஐயரும் செய்ய இருக்கிறார். அவர் இதற்கு முன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 2018 முதல் 2020 வரை கேப்டனாக வழி நடத்தினார். அதன் பின் 2022 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
கொல்கத்தா அணிக்கு 2024 ஐபிஎல் தொடரில் கோப்பையும் பெற்றுக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இதன் மூலம் மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைக்க இருக்கிறார்.
இந்த முறை ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்று கோப்பை வென்று கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதேபோல அஜிங்கியா ரஹானே அனுபவ வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இரண்டாவது முறையாக தொடர்ந்து கோப்பை வெல்ல வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications