
வீழ்ந்த விக்கெட்டுகள்
ரஹானே - புஜாரா காம்போ பற்றி பேசுவதற்கு முன்பு, 2வது டெஸ்ட் போட்டியின் முன்கதைச் சுருக்கத்தை பார்த்துவிடுவோம். நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், கடைசி நாளில் மழை வந்து இந்திய அணியின் எளிதான வெற்றி தட்டிப்பறித்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. அதுவும், கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் சேர்த்தது. லோகேஷ் ராகுல் 129 ரன்களும், ரோஹித் ஷர்மா 83 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 42 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.பிறகு, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். அவரை மட்டும், இந்திய பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ஆனால், இந்தியாவோ இரண்டாம் இன்னிங்ஸில் சொதப்பியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

போராடிய ரஹானே
அப்போது தான் நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா - ரஹானே கூட்டணி இணைந்தது. ஏற்கனவே, இருவரும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஏகத்துக்கும் சொதப்பி வந்தனர். இந்தியாவின் மிடில் ஆர்டரே சீர் குலைந்து போயிருந்தது. இதனால், இருவரின் தலைக்கு மேலே எந்நேரமும் கீழே விழும்படியான கத்தி தொங்கிக் கொண்டிருந்தது. இப்படியொரு இக்கட்டான நிலையில் தான் புஜாரா - ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தியாவின் 2ம் இன்னிங்ஸில் 23.2வது பந்தில் இந்த ஜோடி இணைந்தது. பிரிந்தது எத்தனையாவது ஓவரில் தெரியுமா? 72.4வது ஓவரில். கிட்டத்தட்ட 50 ஓவர்கள் இருவரும் நிலைத்து நின்றார்கள். அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணி சந்திக்கு ஒட்டுமொத்த ஓவர்கள் இது. 206 பந்துகளை சந்தித்த புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்த ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் அதிகமாக விளையாடினர். அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை என்றாலும், நான்காவது நாளில் இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை தள்ளிப்போட்டனர்.

இந்தியா வெற்றி
பிறகு நேற்று முன்தினம் (ஆக.16) கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் ஷர்மா விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த போதும், முகமது ஷமி - பும்ரா ஜோடி நம்ப முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தனிக்கதை. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். ரிஷப் பண்ட் அவுட்டான உடனேயே, இந்தியாவின் கதை முடிந்தது என்றே அனைவரும் கருதினர். ஆனால், 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்து, இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 298 ரன்கள் குவிக்க இருவரும் காரணமாக அமைந்தனர். அந்த பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றதை வரலாறு அறியும். நீங்களும் லைவாக போட்டியை கண்டு ரசித்திருப்பீர்கள்.

ரஹானே பதிலடி
இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா - ரஹானே சிறப்பாக விளையாடியதால் தான் இருவரைப் பற்றியும் இப்போது யாரும் பேசாமல் இருக்கிறார்கள். ஒருவேளை இருவரும் சொதப்பியிருந்தால், இந்நேரத்துக்கு கதையே மாறியிருக்கும். வாய்ப்புக்காக வெளியே உட்காந்திருக்கும் ஹனுமா விஹாரி, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில், இருவர் மீதும் அந்த அளவுக்கு அணியும் சரி, ரசிகர்களும் சரி, அதிருப்தியில் இருந்தனர். குறிப்பாக ரஹானேவுக்கும் பெரிய சிக்கல் காத்திருந்தது. அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று குரல்கள் பலமாக எழத் தொடங்கின. ஆனால், அவர் அடித்த 61 ரன்கள், இந்தியாவுக்கு பேருதவியாக அமைந்தது. தன் மீதான விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்தார். இப்போதும் எல்லாரும் சைலண்ட்.

விமர்சனத்துக்கு பதில்
இந்நிலையில், தற்போது பேஸ்புக் பக்கத்தில், ரஹானே தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் சிரிப்பது போன்ற ஸ்டைலிஷான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டிருக்கும் கேப்ஷன் தான் ஹைலைட். அவர், "My reaction when the trolls get trolled!" என்று பதிவிட்டுள்ளார். அதாவது, என்னை கிண்டல் செய்பவர்கள், கிண்டல் செய்தவர்கள், ஏளனம் செய்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள், காயப்படுத்திவர்கள் அனைவரும் என்னுடைய 'பேக் டூ தி ஃபார்ம்' காரணமாக அவர்கள் ட்ரோல் செய்யப்பட்டபோது, என்னுடைய எதிர்வினை இந்த சிரிப்பு" என்று ஸ்மார்ட்டாக பதிலடி கொடுத்து போஸ்ட் போட்டிருக்கிறார்.
அடுத்தடுத்த மேட்சுலயும் நல்லா ஆடுனா சரிதான்!


Click it and Unblock the Notifications











