இங்கிலாந்து கவுண்டியில் சிஎஸ்கே வீரர் ரஹானே அபார சதம்.. இந்திய அணியில் நீக்கப்பட்ட நிலையில் அபாரம்
கார்டீஃப் : இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான ரஹானே கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் விளையாடினார். அதன் பிறகு ஒரு ஆண்டாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் ரஹானே சேர்க்கப்படவில்லை.
36 வயதான ரகானே இந்திய அணியில் அனுபவம் நிறைந்த வீரராக இருக்கிறார். நடப்பாண்டு இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ரகானே, புஜாரா போன்ற வீரர்கள் அணிக்கு தேவை என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஹானே இந்திய அணிக்கு பரிசீலனை செய்யப்படுவதே இல்லை. செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்க உள்ள துலீப் கோப்பைக்கான நான்கு அணிகளிலும் ரகானே புஜாராவின் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் மனம் தளராத ரகானே இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் லீசெஸ்டர் அணிக்காக விளையாடினார்.
இதில் ரஹானே அபாரமாக விளையாடி தனது 40 ஆவது முதல் தர சதத்தை பூர்த்தி செய்தார். 192 பந்துகளை எதிர்கொண்ட அவர் 102 ரன்கள் விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். லீசெஸ்டர் அணி இரண்டாவது இன்னின்சில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்த நிலையில் ரஹானே களத்திற்கு வந்து ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹண்ட்ஸ்கோம்ப் உடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
இதில் இருவருமே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தனர். முதலில் விளையாடிய தி லீசெஸ்டர் அணியில் முதலில் ரகானே 42 ரன்கள் எடுக்க, அந்த அணி 251 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களம் இறங்க கிளாமர்கான் அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 550 ரன்கள் குவித்தது.
இதை அடுத்து தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் ரஹானே அபாரமாக விளையாடி 102 ரன்கள் சேர்க்க அந்த அணி 326 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. ரஹானே தன்னுடைய அனுபவ ஆட்டத்தின் மூலம் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இதனால் அவர் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications