3 ஐசிசி பட்டங்களை வென்ற இந்திய அணியை தேர்வு செய்த அகர்கர்.. பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலத்தை மேலும் ஒராண்டுக்கு பிசிசிஐ நீட்டிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2027 உலகக் கோப்பைக்கு முன்னதாக அணியில் தொடர்ச்சித்தன்மையை உறுதி செய்வதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. அவரது தலைமையில் இந்திய அணி மூன்று ஐசிசி பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
தனது விளையாட்டு வாழ்க்கையில் 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அகர்கரின் எதிர்காலம் குறித்து 2027 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை நெருங்கும் சூழலில் விவாதங்கள் எழுந்தன.அகர்கர் மாற்றப்படுவாரா என்ற விவாதம் எழுந்த நிலையில், BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, இத்தகைய முடிவுகள் லேசாக எடுக்கப்படுவதில்லை என்றும், அவை வாரியத்தின் தலைமையிடமே இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பேசிய அவர், "இத்தகைய முடிவுகள் BCCI நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்திய கிரிக்கெட்டின் நலன்களை மனதில் கொண்டு, சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இவை. நேரம் வரும்போது, வாரியம் நன்கு ஆலோசித்த முடிவை எடுக்கும்," என்று குறிப்பிட்டார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் வாரியம் அகர்கரின் பதவிக்காலத்தை புதுப்பிக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகர்கரின் பதவிக்காலம் குறிப்பிடத்தக்க வெற்றிகளால் நிரம்பியுள்ளது. அக்டோபர் 2023 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், அவரது தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணிகள் நான்கு ஐசிசி போட்டி இறுதிப் போட்டிகளை எட்டின. அவற்றில் இரண்டு டி20 உலகக் கோப்பைகள் மற்றும் ஒரு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உட்பட மூன்றில் வெற்றி பெற்றன. இச்சாதனைகள் அவரது தொடர்ச்சியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தின.
இது குறித்து வெளியான பிசிசிஐ தகவலின் படி, "அகர்கர் பதவி நீட்டிப்பைக் கோரவில்லை. ஒரு தேர்வாளர் ஜூனியர் அல்லது சீனியர் தேர்வுக் குழுக்களில் நான்கு ஆண்டுகள் வரையும், இரண்டு குழுக்களிலும் மொத்தமாக ஐந்து ஆண்டுகள் வரையும் தொடரலாம். எனவே, அஜித்தின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது, நீட்டிக்கப்படவில்லை," என்று தெளிவுபடுத்தியது.
வெற்றியைத் தாண்டி, அகர்கரின் பணிக்காலத்தில் பல தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுகளையும், மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை படிப்படியாக அணியிலிருந்து நீக்கும் முடிவையும் தேர்வுக் குழுவே எடுத்தது. டி20 உலகக் கோப்பை அணியில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு, சிறந்த ஃபார்மில் இருந்த இஷான் கிஷனுக்கு வாய்ப்பளித்ததும் ஒரு முக்கிய முடிவாகும்.எனினும் அகர்கர் பதவி நீட்டிப்பைக் கோரவில்லை என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications