மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆகாஷ் தீப், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
குறிப்பாக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் அடித்த 31 ரன்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க முக்கிய காரணமாக இருந்தது.

எனினும் ஆகாஷ் தீப், விக்கெட்டுக்காக உழைத்தாலும் அவரால் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முகமது சமியை போல் அவர் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் சில விக்கெட்டுகளில் டி ஆர் எஸ் முடிவும் ஆகாஸ் தீப்புக்கு எதிராக திரும்பியதால் விக்கெட்டும் விழவில்லை.
இந்த சூழலில் ஆகாஷ் தீப், இரண்டு டெஸ்டிகளில் விளையாடி காயம் காரணமாக கடைசி டெஸ்டில் விலகியது பிசிசிஐ நிர்வாகிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ஆங்கில நாளிதழ் பிசிசிஐ நிர்வாகி அளித்துள்ள பேட்டி ஒன்றில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் பந்தை ஒரே மாதிரி வீசவில்லை.
ஒன்று சார்ட் பால் ஆக வீசினார். இல்லை என்றால் ஃபுல் லெங்தில் வீசினார். 28 வயது தான் ஆகிறது, ஆனால் இந்திய அணியில் உள்ளே வெளியே என்று சென்று கொண்டிருக்கிறார். இதனால் அணியில் அவர் எந்த ஒரு தாக்கத்தையும் வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை.ஆகாஷ் தீப் பெங்கால் அணிக்காக 2019 ஆம் ஆண்டு அறிமுகமாகியதில் இருந்தே அவருடைய முதுகுப் பகுதி பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.
இது குறித்து அவர் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனிடையே, பெங்கால் அண்டர் 19 பயிற்சியாளரான சௌரிஸ் லாகிரி அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலிய தொடரில் ஆகாஷ் தீப் நல்ல அனுபவத்தை பெற்றிருப்பார். ஸ்மித் போன்ற வீரர்களை தனது பந்துவீச்சு மூலம் ஆகாஷ் நெருக்கடிக்கு ஆளாக்கினார். இதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.