யோ-யோ டெஸ்ட்டில் அதிக தூரம் ஓடிய இங்கிலாந்து வீரர் யார் தெரியுமா?.. கண்டுபிடிங்க பார்ப்போம்!
Recommended Video

பிர்மிங்காம் : ஆகஸ்ட் 1 முதல் இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து வீரர்கள், யோ-யோ டெஸ்டில் பங்கேற்று தங்கள் உடல் தகுதியை நிரூபித்து வருகிறார்கள்
இங்கிலாந்து வீரர்களில் வயதானவரான அலிஸ்டர் குக், மூன்று கிலோமீட்டர்களுக்கும் அதிகமாக ஓடி தன் உடற்தகுதியை நிரூபித்தார். இந்தியாவை பொறுத்தவரை யோ-யோ டெஸ்ட் என்பது சமீபத்தில் அறிமுகமான ஒரு உடற்தகுதி தேர்வு.
ஆனால், பிற நாடுகளில் யோ-யோ டெஸ்ட் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள ஒன்று. அந்த வகையில் இங்கிலாந்து வீரர்கள் பல ஆண்டுகளாகவே இந்த தேர்வில் பங்கு பெற்று தங்கள் தகுதியை நிரூபித்து அணியில் நீடிக்கிறார்கள்.

மூன்று கிலோமீட்டர் ஓடிய குக்
தற்போது இந்திய டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த யோ-யோ தேர்வில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்களில் வயதானவர், முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக். இவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. இந்த தேர்வில் தகுதிக்கு நிர்ணயிக்கபட்ட குறைந்தபட்ச தூரத்தை விட அதிக தூரம் ஓடிய குக், சுமார் மூன்று கிலோமீட்டர் ஓடி அசத்தினார்.

விடாமல் ஓடிய குக்
மற்ற வீரர்கள் பலரும், தகுதி பெற தேவையான குறைந்தபட்ச தூரம் ஓடிய பின், ஒதுங்கி சென்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர். ஆனால், விடாப்பிடியாக ஓடிய அலிஸ்டர் குக் மூன்று கிலோமீட்டர் ஓடிய பின், நிற்கக் கூட முடியாமல் சாய்ந்தார். பிற வீரர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.

வயதானாலும் மாறாத உடற்தகுதி
பொறுமையாக ரன் குவிக்கும் அணுகுமுறையை கொண்ட அலிஸ்டர் குக், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதே போல, யோ-யோ தேர்விலும் இவர்தான் இங்கிலாந்து வீரர்களிலேயே சிறப்பாக செயல்படுபவர் என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது. பல ஆண்டுகளாகவே இவர், மற்ற இங்கிலாந்து வீரர்களை விட அதிக தூரம் ஓடி, அதிக உடற்தகுதி கொண்டவர் என நிரூபித்து வருகிறார்.

யோ-யோவில் தடுமாறும் இந்தியா
இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் யோ-யோ தேர்வில் குறைந்தபட்சம் 19 புள்ளிகள் பெற வேண்டும் என நிர்ணயித்துள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தானில் 17.4 புள்ளிகள் குறைந்தபட்சமாக உள்ளன. ஆனால், இந்தியாவில் 16.1 புள்ளிகள் மட்டுமே குறைந்தபட்ச தகுதியாக உள்ளது. இந்த குறைவான அளவிற்கே இந்திய வீரர்கள் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications