சென்னையில் நாளை இந்தியா-ஆஸி. ஏ அணிகள் டெஸ்ட் தொடக்கம்.. கோஹ்லி மீது ரசிகர்கள் கவனம்
சென்னை: இந்தியா-ஆஸ்திரேலிய ஏ அணிகளிடையேயான நாளைய டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோஹ்லி பங்கேற்க உள்ளதால் இந்திய ரசிகர்கள், அதிலும் குறிப்பாக போட்டி நடைபெற உள்ள சென்னை நகரை சேர்ந்த ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியிலுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஏ அணி மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான, அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி சென்னை சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியாவின் அமித் மிஸ்ரா மற்றும் ஓஜா ஆகிய ஸ்பின்னர்கள் முறையே, 5 மற்றும் 6 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

ஸ்பின் சொர்க்கம்
முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ராகுல் அதிகபட்சமாக 96 ரன்கள் விளாசினார். இருப்பினும் போட்டி டிராவில் முடிவடைந்தது. சென்னை மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாகவும், பந்து வரும் வேகம் குறைவாக இருப்பதும் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது.

இலங்கை போன்ற பிட்ச்
இந்த பிட்ச் ஏறத்தாழ இலங்கை பிட்சுகளை போன்ற தன்மையுடன் உள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி முதல் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. எனவே அதற்கு பயிற்சி பெறும் வகையில், இந்திய கேப்டன் கோஹ்லி, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

3 வீரர்கள் இல்லை
அதேநேரம், இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த ராகுல், அமித் மிஷ்ரா, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் பயிற்சிக்காக இந்திய அணியுடன் இணைந்து கொள்ள உள்ளதால், அவர்கள் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை.

புஜாரா பேட்டி
இந்திய ஏ அணி கேப்டன் செட்டேஷ்வர் புஜாரா கூறுகையில், "மூன்று முக்கிய வீரர்கள் இல்லாதது பின்னடைவுதான். ஜெயந்த் யாதவுடன் இணைந்து நான் ஓப்பனிங்கில் களமிறங்க திட்டமிட்டுள்ளேன்" என்றார். கோஹ்லி ஆட்டத்தை பார்க்க இந்திய ரசிகர்கள் அதிலும் குறிப்பாக சென்னை ரசிகர்கள் தயாராகிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications