லண்டன் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி நான்கு டி20 மற்றும் நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சிஎஸ்கே வீரர் டிவோன் கான்வே 3 ரன்களில் வெளியேறினார்.

தொடக்க வீரர் பின் ஆலன் அதிரடியாக விளையாட முற்பட்டு மூன்று சிக்ஸர்களுடன் 21 ரன்களில் வெளியேறினார். அதிரடி விக்கெட் கீப்பர் டீம் சிப்பர்ட் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மார்க் சாப்மேன் 11 ரன்களிலும், டேரல் மிச்செல் ஏழு ரன்களிலும், சிஎஸ்கே வீரர் மிட்செல் சான்ட்நர் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 96 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
நடுவரிசையில் கிளன் பிலிப்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி 38 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஆடம் மிலன் 10 ரன்களிலும் , சோதி 16 ரன்களும் எடுக்க நியூசிலாந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது .இங்கிலாந்தில் பந்துவீச்சு தரப்பில் லுக் வுட் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதை அடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜானி பாரிஸ்டோ நான்கு ரன்களில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீரரான வில் ஜேக்ஸ் 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் மற்றும் ஹாரி புருக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. டேவிட் மாலன் 42 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.
எஸ் ஆர் ஹச் வீரர் ஹாரி புருக் 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று சிக்சர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ஸ்டோனிஸ் 10 ரன்கள் சேர்க்க இங்கிலாந்து அணி 14 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.