மும்பை: சச்சின் பிளாஸ்டர்ஸ்-ஷேன்ஸ் வாரியர்ஸ் அணிகளில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப்போகிறார்கள் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் 7ம் தேதி தொடங்க உள்ளது, ஓய்வுபெற்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் மோதும் டி20 தொடர். கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ் என்பது அத்தொடரின் பெயர்.
அதில் சச்சின் தலைமையில் சச்சின் பிளாஸ்டர்ஸ் என்ற அணியும், ஷேன் வார்னே தலைமையில் ஷேன்ஸ் வாரியர்ஸ் என்ற அணியும் மோதுகின்றன.
லாரா, ரிக்கி பாண்டிங், ஷேவாக், கங்குலி, மெக்ராத், கல்லீஸ் உள்ளிட்ட ஓய்வுபெற்ற உலகின் முன்னணி வீரர்கள் இதில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சச்சின் டீமில் எந்தெந்த வீரர்கள் ஆடப்போகிறார்கள் என்பதும், வார்னே டீமில் யார், யார் ஆட உள்ளனர் என்ற தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இந்த தகவல் நாளை வெளியாகும் என்று சச்சின் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாளைய அறிவிப்புக்காக ரசிகர்கள் வழிமீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.