யோ யோ டெஸ்ட்டில் பெயில்.. சிக்கலில் அம்பட்டி ராயுடு.. இந்திய அணியிலிருந்து தூக்கப்படுகிறார்!
பெங்களூரு: வீரர்களை கதி கலங்க வைக்கும் யோ யோ டெஸ்ட்டில் அம்பட்டி ராயுடு தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்படும் அபாயத்தை சந்தித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் விளையாடிய ராயுடு தனது சிறப்பான ஆட்டத்தால் தேர்வாளர்களைக் கவர்ந்தார். இதனால் அவருக்கு இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் தற்போது அது பறிபோகப் போகிறது.
இந்திய அணியில் இடம் பெறுவோருக்காக பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் யோ யோ எனப்படும் உடல் தகுதி சோதனை நடைபெறுவது வழக்கம். இதில் பாஸ் ஆனால்தான் அணியில் இடம் பெற முடியும். இந்த சோதனையில்தான் தற்போது ராயுடு தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் இந்திய அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியாகி விட்டது.

கிங்ஸ் ஆட்டம்
இந்த வருடம் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய ராயுடு 602 ரன்களை அதிரடியாக குவித்தார். ஒரு சதம், 3 அரை சதம் அடித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 4வது இடத்தைப் பிடித்தார்.

யோ யோ தோல்வி
இந்த நிலையில் அவருக்கு பெங்களூரில் யோ யோ டெஸ்ட் நடத்தப்பட்டது. அதில் தேவையான 16.1 லெவலை தொட அவர் தவறி விட்டார். இதனால் அவர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கோஹ்லி - டோணி பாஸ்
அதேசமயம், இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முன்னாள் கேப்டன் டோணி ஆகியோர் இந்த சோதனையில் பாஸ் ஆகியுள்ளனர். டெஸ்ட்டில் தோல்வி அடைந்து விட்டதால் இந்திய அணியிலிருந்து அம்பட்டி ராயுடு நீக்கப்படவுள்ளார். ஏற்கனவே இதே டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதாக இருந்த முகம்மது சமி நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ராயுடு மட்டுமே
இங்கிலாந்து செல்லத் தேர்வாகியுள்ள அனைத்து வீரர்களுமே பிட்னஸ் டெஸ்ட்டில் பாஸ் ஆகியுள்ளனர். ராயுடு மட்டுமே தோல்வி அடைந்துள்ளாராம். ஐபிஎல்லில் ஆடிய ஆட்டம் கடைசியில் வேஸ்ட்டாகி விட்டது ராயுடுவுக்கு.


Click it and Unblock the Notifications