பெங்களூரு: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான பயிற்சியாளராக ஆண்டி பிளவரை கொண்டு வந்து ஆர்சிபி அணி மெகா தவறை செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
அண்மையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவரின் 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பாத லக்னோ அணி, புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கரை ஒப்பந்தம் செய்தது.
இந்த நிலையில் ஆர்சிபி அணியில் புதிய பயிற்சியாளராக ஆண்டி பிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆர்சிபி அணி நிர்வாகம் வெளியிட்டது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் மாற்றம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாததால், பயிற்சியாளர் குழுவை நீக்கியுள்ளது. இதனால் புதிய பயிற்சியாளராக ஆண்டி பிளவரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் வரும் ஐபிஎல் சீசனில் ஆண்டி பிளவர் மிகப்பெரிய சவாலை சந்திக்க போகிறார்.
மெகா ஏலத்தின் போது புதிய பயிற்சியாளர்களோடு களமிறங்குவதற்கும், மினி ஏலத்திற்கு முன் புதிய பயிற்சியாளர்களோடு களமிறங்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. மெகா ஏலத்தில் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் கணக்கில் கொண்டு, புதிய அணியை பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்தால் கட்டமைக்க முடியும். ஆனால் ஆண்டி பிளவரால் தற்போது புதிய அணியை கட்டமைக்க வாய்ப்பே இல்லை. இதனால் இருக்கும் வீரர்களை கொண்டு அடுத்த சீசனில் களமிறங்க வேண்டும்.

குறிப்பாக ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரில் என்ன பிரச்சனையெல்லாம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு சில வீரர்களை மினி ஏலத்திற்கு முன் ரிலீஸ் செய்தால், அவர்களுக்கான சரியான மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. ஆனால் ஆண்டி பிளவர் அடுத்த சீசனை தொடங்கும் போது காயத்தில் இருந்து ரஜத் படிதர் திரும்ப வந்துவிடுவார். இது ஒன்று மட்டுமே ஆர்சிபி அணிக்கும், ஆண்டி பிளவருக்கும் சாதகமான அம்சமாகும் என்று தெரிவித்துள்ளார்.