டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக அனில் அம்பானி திட்டமிட்டு்ள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சகாரா நிறுவனம் இருந்து வருகிறது. 4 ஆண்டுகால ஸ்பான்சராக இருக்க ரூ. 400 கோடியைத் தந்தது சகாரா. இதன் ஸ்பான்சர் காலம் அடுத்த மாதம் முடிவடைவதையொட்டி புதிய ஸ்பான்சரை தேர்வு செய்ய டெண்டர் விடப்படவுள்ளது.
இதையடுத்து கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரைப் பெற ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி முயற்சித்து வருகிறார். ஹீரோ ஹோண்டா நிறுவனமும் ஸ்பான்சரை பெற முயற்சித்து வருகிறது.
அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி ஐ.பி.எல். மும்பை அணி உரிமையாளராக உள்ளார்.
இந் நிலையில் கிரிக்கெட்டில் தானும் எந்த வகையிலாவது பங்கு பெற திட்டமிட்டு, ஸ்பான்சரை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார் அனில் அம்பானி.
ஐபிஎல் முறைகேடு விசாரணை-லலித் கோரிக்கை:
இதற்கிடையே பல்வேறு முறைகேடுகளைச் செய்ததால் ஐ.பி.எல். தலைவர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட லலித் மோடி தன் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான நடுநிலைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
லலித் மோடி மீதான புகார்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தவுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மோடி, இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், என் மீது கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தக் கூடாது. சுதந்திரமான நடுநிலைக் குழுவை அமைத்துத் தான் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.