“ரொம்ப தப்பு பண்றீங்க”.. இந்திய அணியில் நடக்கும் தவறுகள்.. லிஸ்ட் போட்டு வெளுத்த அனில் கும்ப்ளே
நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் வியூகங்களையும், பிளேயிங் லெவனில் அடிக்கடி செய்யப்படும் தேவையில்லாத மாற்றங்களையும் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூன்றாவது டி20 போட்டியில் 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 76 ரன்களுக்கே சுருண்டது. கடந்த 5 போட்டிகளாக ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திணறி வரும் இந்திய அணி, தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, "இந்திய அணி இங்கிலாந்திடம் மொத்தமாக சரணடைந்துவிட்டது. உலக சாம்பியனான ஒரு அணி, இப்படி மிக மோசமாக விளையாடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 202 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும்போது, நிதானமாக ஆடி அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு விக்கெட்டுகளை வாரி வழங்கினர். அதிரடி பேட்ஸ்மேனான சிவம் துபே இருக்கும்போது, அவருக்கு முன்னதாக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானாவை களம் இறக்கியது தான் இதில் மிகவும் மோசம். இது முற்றிலும் தவறான முடிவு" என்று சாடினார்.
இந்திய அணியில் வீரர்களை அடிக்கடி மாற்றுவது பந்துவீச்சாளர்களின் தன்னம்பிக்கையை மொத்தமாக குலைத்துவிடும் என்று கும்ப்ளே எச்சரித்துள்ளார். "இந்திய அணியில் வீரர்களை அடிக்கடி மாற்றுவதை முதலில் நிறுத்த வேண்டும். அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டியில் சொதப்பினார் என்பதற்காக பிரசித் கிருஷ்ணாவை உடனடியாக அணியை விட்டு நீக்கியது அநியாயம். ஒரு புதிய கேப்டன் தனது 5 முக்கிய பந்துவீச்சாளர்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் ரன் வேண்டுமானால் அடிக்கலாம், ஆனால் பந்துவீச்சாளர்கள் தான் போட்டிகளை ஜெயித்து கொடுப்பார்கள் என்பதை மறக்கக் கூடாது" என்றார் கும்ப்ளே.
குல்தீப் யாதவ் என்ன பாவம் செய்தார்?
மேலும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இங்கிலாந்து தொடர் மற்றும் அடுத்து வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடர் என தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்படுவது தனக்கு பெரும் அதிர்ச்சியை தருவதாக கும்ப்ளே கூறினார்.
"ஐபிஎல் தொடரில் ஒரு சீசன் சரியாக அமையவில்லை என்பதற்காக, உலகக்கோப்பை வென்று கொடுத்த குல்தீப் யாதவை இப்படி ஓரங்கட்டுவதா? அவருக்கு ஒன்றும் 38 வயது ஆகவில்லை, இன்னும் 31 வயது தான் ஆகிறது. அவர் டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடாததால் பணிச்சுமை (Workload) என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, அவருக்கு தேவையில்லாத ஓய்வை தராமல் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும்" என்று கும்ப்ளே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications

