சென்னை: சில வாரங்களுக்கு முன் "ஹர்ஷித் ராணா, கம்பீரின் 'ஆமாம் சாமி' என்பதால் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்" என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்து இருந்தார். இது பெரிதாக மாறியது. இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஸ்ரீகாந்த் பெயரை குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அப்போது ஸ்ரீகாந்த்தின் கருத்தைக் கண்டித்த முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரீகாந்த் பெயரை குறிப்பிடாமல் அவர் தனிநபர் தாக்குதல் செய்வதாக பேசி இருந்தார். இதற்கு ஸ்ரீகாந்த்தின் மகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அனிருத்தா ஸ்ரீகாந்த், "நீங்கள் ஆர்சிபி பந்துவீச்சைக் கிண்டலடித்தபோது, நாங்கள் சிரித்தோம்; அது மட்டும் நியாயமா?" என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.

ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், அது கம்பீரின் சிபாரிசால் நடந்த தேர்வு என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "யூட்யூப் சேனலுக்காக ஒரு இளம் வீரரைக் குறிவைப்பது வெட்கக்கேடானது" என்று பொங்கி எழுந்தார். அப்போது ஸ்ரீகாந்த் மட்டுமின்றி, அஸ்வினும் தனது யூட்யூப் சேனலில் ஹர்ஷித் ராணா தேர்வை விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கம்பீர் யாரை குறிப்பிட்டார் என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது.
கம்பீரின் கண்டனத்துக்கு பின் இந்த விவகாரத்தில், ஹர்ஷித் ராணாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அஸ்வின், யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், "விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதலாக மாறக்கூடாது; அது ஒரு வீரரின் தன்னம்பிக்கையைச் சிதைத்துவிடும். அவர்களுக்கும் ஒரு குடும்பம் உள்ளது." என்று அறிவுரை கூறியிருந்தார்.
அஸ்வினின் இந்த அறிவுரைக்கு, ஸ்ரீகாந்த்தின் யூடியூப் சேனலிலேயே, அவரது மகன் அனிருத்தா பதிலடி கொடுத்துள்ளார். "நான் அஸ்வினிடம் கேட்க விரும்புகிறேன், 'ஏன் ப்ரோ? நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம்?'" என்று தொடங்கிய அனிருத்தா, "இது கொஞ்சம் நியாயமற்றதாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஒட்டுமொத்த ஆர்சிபி (RCB) பந்துவீச்சு வரிசையையே கேலி செய்தபோது, நாங்கள் அதை ரசித்துச் சிரித்தோம். அப்போது, அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று அஸ்வினின் கடந்த கால விமர்சனத்தை நினைவுபடுத்தி, கேள்வி எழுப்பினார்.
"இது கொஞ்சம் பாசாங்குத்தனமாக தெரிகிறது. எல்லோருக்கும் அவரவர் கருத்துக்கள் உண்டு. இந்த சேனலில், நீங்கள் ஒரு வலுவான மற்றும் ஒருதலைப்பட்சமான கருத்தையே பெறுவீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை" என்று அனிருத்தா தன் தந்தையின் பேச்சை ஆதரித்து பேசினார்.
தனது தந்தையின் துணிச்சலான பேச்சு குறித்துப் பேசிய அனிருத்தா, "சீக்கா (ஸ்ரீகாந்த்) 1983-ல் லார்ட்ஸ் பால்கனியில் சிகரெட் பிடித்த காலத்திலிருந்தே அப்படித்தான். அவர் யாருக்கும் பயந்ததில்லை. அவர் மாறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சில சமயங்களில் அவரது பேச்சுக்கள் சங்கடமாக இருக்கலாம், எனக்குத் தெரியும். ஆனால், அந்த அப்பா-மகன் உரையாடலை நாங்கள் இயல்பாக வைத்திருக்கவே முயற்சிக்கிறோம்" என்று தனது தந்தைக்கு ஆதரவாகப் பேசினார்.
ஒரு இளம் வீரரின் தேர்வு குறித்து ஸ்ரீகாந்த் எழுப்பிய விமர்சனம், தற்போது கம்பீர், அஸ்வின், அனிருத்தா எனப் பலரையும் இந்த வார்த்தைப் போருக்குள் இழுத்துள்ளது. அஸ்வின், ஆர்சிபி பந்துவீச்சைக் கிண்டலடித்ததை அனிருத்தா சுட்டிக்காட்டியிருப்பது, இந்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவர் கருத்தைச் சொல்ல, மற்றொருவர் அதற்குப் பதிலடி கொடுக்க, இந்த மோதல் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள், இப்படி சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.