கேரள விளையாட்டுக் கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் அஞ்சு பாபி ஜார்ஜ்
திருவனந்தபுரம்: முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ், கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் முன்னணி வாலிபால் வீரர் டாம் ஜோஸ் உள்ளிட்ட கவுன்சிலின் பிற 13 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜை கேரள விளையாட்டு கவுன்சில் தலைவராக உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அரசு நியமித்தது. இவர் பெங்களூரில் சுங்க இலாகா துறை அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெயராஜனை அஞ்சு பாபி ஜார்ஜ் தனது குழுவினருடன் மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஜெயராஜன் தன்னை அவமதித்து மிரட்டியதாக அஞ்சு பாபி ஜார்ஜ் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து கேரள மாநில விளையாட்டு கவுன்சில் தலைமையகத்தில் அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் உறுப்பினர்கள் நேற்று கூடி அவசர ஆலோசனை நடத்தினர். பின்னர், அஞ்சு பாபி ஜார்ஜ் கேரள மாநில விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் முன்னணி வாலிபால் வீரர் டாம் ஜோஸ் உள்ளிட்ட கவுன்சிலின் பிற 13 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி கேள்விப்பட்ட பிறகும் பதவியில் தொடர்வது முறையாக இருக்காது. தவறான புரிதல்கள் மற்றும் எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையடுத்து நானும் எனது கவுன்சில் உறுப்பினர்களும் பதவிகளில் தொடர விரும்பவில்லை. அதனால் ராஜினாமா செய்துள்ளோம் என்றார்.


Click it and Unblock the Notifications