மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு கிரிக்கெட் வீரர் படுகாயம்
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் உள்ளூர் லீக் மேட்ச் விளையாடிய போது தலையில் பலத்த காயமடைந்த கொல்கத்தா வீரர் ராகுல் கோஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளூர் போட்டியின் போது பெங்கால் அணியின் முன்னாள் கேப்டனான 19 வயது அன்கித் கேஷ்ரி தலையில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்கித், மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சோகம் மறைவதற்கு முன்னதாகவே, கொல்கத்தாவில் மேலும் ஒரு வீரர் கிரிக்கெட் விளையாட்டில் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார் ராகுல் கோஷ் என்ற இளம் வீரர். அப்போது சீறிப் பாய்ந்து வந்த பந்து ஒன்று அவரது இடது பக்க தலையில் பட்டு காயமேற்பட்டது.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் ராகுல். அங்கு அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், தலையில் சிறிய ரத்தக்கட்டி இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ராகுல் வைக்கப்பட்டுள்ளார் என்று டாக்டர் சபயசாச்சி சென் கூறியுள்ளார்.
தற்போது அவரது நிலை ஸ்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications