டோணியின் மற்றொரு உலகச் சாதனை
கட்டாக்: ஒருதினப் போட்டியில், 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் என்ற பெருமையைப் பெற்றுள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, டி-20 போட்டியில் புதிய சாதனையைப் புரிந்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த முதல் டி-20 போட்டியில், பேட்டிங்கில் அசத்தியதுடன், 2 கேட்ச், 2 மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தார் தல டோணி.
இதன் மூலம், டி-20 போட்டிகளில், அதிக விக்கெட்டை வீழ்த்த உதவிய விக்கெட் கீப்பரானார் டோணி. 47 கேட்ச்கள், 27 ஸ்டம்பிங் என, மொத்தம் 74 விக்கெட்களை வீழ்த்தியதில் உதவியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், 72 விக்கெட் வீழ்த்தியதில் உதவியுள்ளார். பீல்டராக 44 கேட்ச்களும், விக்கெட் கீப்பராக, 21 கேட்ச்கள், 7 ஸ்டம்பிங் செய்துள்ளார்.
அதிக ரன்கள் எடுத்தார்
கட்டாக் போட்டியின்போது, டி-20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில், சுரேஷ் ரெய்னாவை முந்தி, மூன்றாவது இடத்தை டோணி பிடித்தார். அவுட்டாகாமல், 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த டோணி, 84 டி-20 போட்டிகளில், 1320 ரன்களை சேர்த்துள்ளார். இதன் மூலம், 1307 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னாவை பின்னுக்கு தள்ளினார்.
கிரேட் பினிஷனரின் சாதனை
டி-20ல் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்களில், விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா முதலிரண்டு இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில், 17 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, 69 போட்டிகளில், 1502 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோஹ்லி, 1956 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த இரண்டு பதிவுகளுடன், கிரேட் பினிஷனரான டோணி மற்றொரு சாதனையையும் பதிவு செய்தார். கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது இது 5வது முறையாகும்.
Story first published: Friday, December 22, 2017, 10:54 [IST]
Other articles published on Dec 22, 2017


Click it and Unblock the Notifications