இலங்கையை வெளுத்தெடுத்து.. சாதனை நாயகனாக தலைநிமிர்ந்த கோஹ்லி!
டெல்லி: இலங்கை அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியக் கேப்டனாக செயல்பட்ட விராத் கோஹ்லி மேலும் ஒரு உலகச சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 5 போட்டிகளிலும் வென்று விட்டது. இதில் முதல் நான்கு போட்டிகளிலிலும் இந்தியா சொல்லி வைத்தது போல ஜெயித்தது. கடைசிப் போட்டியில்தான் கொஞ்சமாவது இலங்கை வீரர்கள் போராடிப் பார்த்தனர்.
இந்த தொடர் வெற்றியானது, இந்தியாவைப் பொறுத்தவரை, இலங்கைக்கு எதிராக தொடர்ந்து வென்ற 5வது இரு தரப்பு தொடராகவும் அமைந்தது.
இந்தத் தொடரால் இந்திய அணியில் சிலருக்கு சில சாதனைகளும், பெருமைகளும் உரித்தாகின.

- இந்திய பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் தான் இந்த தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர் ஆவார். அவர் மொத்தம் 11 விக்கெட்களை சாய்த்தார்.
- விராத் கோஹ்லி புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்தார். அதாவது தொடர்ந்து நான்காவது வருடமாக ஒரே ஆண்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையே இது.
- கடந்த 2011, முதல் தொடர்ந்து விராத் கோஹ்லி ஆண்டுக்கு 1000 ரன்கள் மற்றும் அதற்கு மேல் குவித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இருப்பினும் இந்த ஆண்டு முதலில் 1000 ரன்களைக் கடந்தவர் இலங்கையின் ஏஞ்செலோ மாத்யூஸ்தான். அவருக்கு அடுத்து, அதே போட்டியில் கோஹ்லி தனது 1000மாவது ரன்னைத் தாண்டினார்.
- ஒரு நாள் போட்டியில் தனது 21வது சதத்தையும் இந்தத் தொடரில் போட்டார் கோஹ்லி.
- கோஹ்லி, 4வது வீரராக களம் இறங்கி அதிக ரன்களைக் குவித்ததும் இந்தத் தொடரில்தான். அவரது 139 ரன்கள் இந்த சாதனைக்கு வழி வகுத்தது. இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 2012ல் நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் 4வது வீரராக களம் இறங்கி 133 ரன்களை எடுத்திருந்தார்.
- ஒரு நாள் போட்டிகளில் நான்காவது முறையாக தொடர் நாயகன் விருதை இந்த ஆண்டு அவர் பெற்றார். இதில் 2 முறை இலங்கைக்கு எதிரான தொடரிலும், மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலா ஒரு முறையும் தொடர் நாயகன் விருதை அவர் பெற்றுள்ளார்.
- ஒரு அணிக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியாவுக்கு இது 5 வது முறையாகும். இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 2முறையும், நீியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வேவுக்கு எதிராக தலா ஒருமுறையும் இந்தியா வெள்ளை அடித்துள்ளது.
- கேப்டன் டோணியும், கோஹ்லியும் ஆளுக்கு 2 வெள்ளை அடித்த (5-0) பெருமையை கையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Tuesday, November 18, 2014, 11:03 [IST]
Other articles published on Nov 18, 2014


Click it and Unblock the Notifications