“வைபவ் சூர்யவன்ஷி.. வெறும் டி20 ஆடணுமா இல்லை..”.. இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா அறிவுரை
கொழும்பு: இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி இன்னும் ஒரு குழந்தை என்றும், அவரை விளம்பர உலகத்தின் சலசலப்பு மற்றும் தேவையற்ற அழுத்தங்களிலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்றும் ரணதுங்கா கூறி இருக்கிறார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவர் அப்போதைய கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா. அவர் ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "வைபவ் சூர்யவன்ஷி இன்னும் சிறுவன் தான். அவனது இயல்பான ஆட்டத்தை விளையாட நாம் அனுமதிக்க வேண்டும். தற்கால கிரிக்கெட்டில் இளம் வீரர்களைச் சுற்றி மேலாளர்கள், விளம்பர நிறுவனங்கள் போன்ற ஒரு வலை பின்னப்படுகிறது. இவ்வளவு சிறிய வயதில் இந்த விளம்பர வெளிச்சத்தில் சிக்கினால், அது அவரது கவனத்தை சிதறடித்து ஆட்டத்தை பாதிக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

டி20 கிரிக்கெட் குறித்துப் பேசிய அவர், "டி20 போட்டிகள் ஒரு வீரரை சிறந்த முறையில் ரசிகர்களை மகிழ்விக்கும் கலைஞராக மாற்றலாம். ஆனால் ஒரு பேட்ஸ்மேனின் உண்மையான திறமை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே சோதிக்கப்படும். வைபவ் வெறும் டி20 வீரராக மட்டும் இருக்க விரும்புகிறாரா அல்லது டெஸ்ட் போட்டிகளில் சாதித்து ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மாற விரும்புகிறாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்ற இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களிடமிருந்து வைபவ் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரணதுங்கா அறிவுறுத்தியுள்ளார். "எங்கள் காலத்தில் நாங்கள் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் ஆகியோரைப் பார்த்து கிரிக்கெட் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டோம். அதேபோல வைபவ்வும் இந்திய ஜாம்பவான்களிடம் கடினமான சூழ்நிலைகளை எப்படிக் கையாள்வது என்பதைப் பழக வேண்டும்" என்று அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி தற்போது உள்ளூர் அளவிலான துலீப் டிராபி தொடரில் டெஸ்ட் வடிவத்தில் விளையாட இருக்கிறார். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் அவரது செயல்பாடு இதுவரை திருப்திகரமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

