"சிப்ஸ், கூல்டிரிங்ஸ் வாங்க அப்பா, அம்மாகிட்ட காசு கேட்கும் ஆள் நீ”.. ரசிகருடன் மோதிய அர்ஷ்தீப் சிங்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், தற்போது மைதானத்தில் வீசும் பந்துகளை விட, சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் கருத்துகளால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவை நிறத்தைக் குறித்துக் கிண்டல் செய்த விவகாரம் தணியும் முன்பே, ரசிகர் ஒருவருடன் அவர் மோதியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாட்டைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் அர்ஷ்தீப் சிங்கை டேக் செய்திருந்தார். அதில், "பஞ்சாப் அணியின் பெயரிலிருந்து 'பஞ்சாப்' என்பதை நீக்கிவிடுங்கள், அந்தப் பெயருக்கே நீங்கள் அவமானத்தைத் தேடித் தருகிறீர்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த அர்ஷ்தீப் சிங், "சிங் சாப்... பஞ்சாப் மாநிலத்திற்காக நீ என்ன செய்தாய்? இன்னும் சிப்ஸ் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் வாங்க அப்பா அம்மாவிடம் காசு கேட்கும் ஆட்கள் எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்ண வந்துவிட்டீர்களா?" என மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார். இந்த உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது.

நிறவெறி புகார்
இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், சக வீரர் திலக் வர்மாவைப் பார்த்து "ஏய் அந்தேரே (இருட்டே), சன்ஸ்கிரீன் போட்டுக்கொண்டாயா?" எனக் கிண்டல் செய்ததாக அர்ஷ்தீப் சிங் மீது புகார் எழுந்துள்ளது. இது அப்பட்டமான நிறவெறி செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில், "அர்ஷ்தீப் சிங் இந்த சீசன் முழுவதும் விளையாடத் தடை விதிக்கப்பட வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் 1980-களில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இப்படி ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. சுனில் கவாஸ்கர் எனக்காகப் பிறந்தநாள் கேக் ஆர்டர் செய்தபோது, 'கருப்பான பையனுக்குக் கருப்பான சாக்லேட் கேக்' என எனது சக வீரர் ஒருவரே கிண்டல் செய்தார். அந்த வலி எனக்குத் தெரியும்" என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அர்ஷ்தீப் சிங் மூலமாக அணியின் ரகசியங்கள் கசிய வாய்ப்புள்ளதாகக் கூறி, 'விலாக்' (Vlog) செய்வதைத் தவிர்க்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது. தற்போது அடுத்தடுத்து இரண்டு சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்திற்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
