2018, 2024 - இரண்டு உலகக்கோப்பைகளை கொடுத்த கோச் நீங்க.. டிராவிட்டுக்கு நன்றி கூறிய அர்ஷ்தீப் சிங்
மும்பை: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2024 டி20 உலக கோப்பை வென்ற நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு நன்றி கூறி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் இரண்டு உலகக் கோப்பைகளை ராகுல் டிராவிட் உடன் சேர்ந்து கையில் ஏந்திக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் கீழ், "2018 மற்றும் 2024 என இரண்டு உலகக் கோப்பைகளை நான் வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளருக்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
இதை அடுத்து 2018இல் எந்த உலகக் கோப்பையை ராகுல் டிராவிட் மற்றும் அர்ஷ்தீப் சிங் வென்றார்கள்? என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை நடைபெற்றது. அப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த ராகுல் டிராவிட் இந்திய அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக அந்த உலகக் கோப்பையில் செயல்பட்டார்.

அப்போதைய இந்திய அண்டர் 19 அணியில் சுப்மன் கில், ரியான் பராக், அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ப்ரித்வி ஷா போன்ற வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அப்போது இந்திய அணி அரை இறுதியில் பாகிஸ்தான் அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றியை பதிவு செய்திருந்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணியை இறுதி போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதான வெற்றியை பெற்று உலகக் கோப்பை வென்றது.
அந்த தொடரின் போது அர்ஷ்தீப் சிங்-குக்கு அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், உத்தேச அணியில் இடம் பெற்றிருந்ததார். அந்த உலகக் கோப்பையின் முடிவில் அவர் ராகுல் டிராவிட் உடன் உலகக் கோப்பையை ஏந்தி நிற்பது போல ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அந்த புகைப்படத்தையும், தற்போது 2024 டி20 உலக கோப்பையுடன் எடுத்த புகைப்படத்தையும் சேர்த்து இப்போது இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார் அர்ஷ்தீப் சிங். 2018 அண்டர் 19 உலகக் கோப்பை வெற்றிக்கும், 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கும் ஒரு முக்கிய தொடர்பு உள்ளது. ராகுல் டிராவிட் எந்த அணிக்கும் பயிற்சியாளராக செயல்படாத நிலையில் முதன்முறையாக இந்திய அண்டர் 19 அணிக்கு தான் பயிற்சியாளராக செயல்பட்டார்.
அவரது முதல் முயற்சியிலேயே இந்திய அண்டர் 19 அணியும் உலகக் கோப்பை வென்றது. அதன் பின் இரண்டு ஆண்டுகள் அவர் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக செயல்பட்டு வந்தார். அதன் முடிவில் அவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ. அதற்கு முக்கிய காரணமே அண்டர் 19 உலகக் கோப்பை வெற்றி தான். அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் சொன்ன நன்றியை இந்திய ரசிகர்கள் அனைவருமே ராகுல் டிராவிட்திற்கு சொல்லலாம்.


Click it and Unblock the Notifications