என்னில் ஒரு பகுதி அவருடன் சென்று விட்டது.. கம்பீர் கண்ணீர் பதிவு!
டெல்லி : முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு கிரிக்கெட் வீரரும், பாஜக மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் மிகவும் உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பாஜக கட்சி மற்றும் ஆட்சியில் முக்கிய பங்காற்றியவர்.
அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை அன்று காலமானார். அவருக்கு வயது 66. அவர் அரசியல் மட்டுமின்றி, பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்தார்.

கிரிக்கெட் ஆர்வம்
அருண் ஜேட்லி கிரிக்கெட்டில் தனி ஆர்வம் கொண்டவர். எத்தனை தீவிர அரசியலில் இருந்தாலும் கிரிக்கெட்டை அவர் விட்டு விடவில்லை. 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்தார்.

டெல்லி கிரிக்கெட் வளர்ச்சி
அவரது காலத்தில் தான் டெல்லி கிரிக்கெட் மைதானமான பெரோஸ் ஷா கோட்லா பெரிய வளர்ச்சியை கண்டது. மேலும், இந்திய அணிக்கு டெல்லியில் இருந்து வீரர்கள் வரத் துவங்கினர். அதற்கு முன் டெல்லி வீரர்கள் பெரிய அளவில் இந்திய அணியின் இடம் பெறவில்லை.

உருகிய வீரர்கள்
சேவாக், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட டெல்லி வீரர்கள் அருண் ஜேட்லிக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவுகள் பகிர்ந்தனர். அவர்கள் இருவருமே அருண் ஜேட்லி டெல்லி வீரர்களுக்கு பல வழிகளில் உதவி செய்தார் என்பதை குறிப்பிட்டு இருந்தனர்.

கம்பீர் இரங்கல்
கௌதம் கம்பீர் தனக்கு அருண் ஜேட்லி தந்தையை போன்றவர் என்று கூறி உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தன்னில் ஒரு பகுதி போய் விட்டது என கூறி இருக்கிறார் அவர். கிரிக்கெட் தாண்டியும் கம்பீருடன் நெருக்கமாக இருந்துள்ளார் அருண் ஜேட்லி.
உருக்கமான பதிவு
அவரது பதிவு - தந்தை உங்களுக்கு பேச கற்றுத் தருவார். ஆனால், ஒரு தந்தையை போன்றவர் உங்களுக்கு உரையாட கற்றுத் தருவார். தந்தை நடக்கக் கற்றுத் தருவார். தந்தையை போன்றவர் உங்களுக்கு வீறுநடை போட கற்றுத் தருவார்.

என்னில் ஒரு பகுதி..
தந்தை உங்களுக்கு பெயர் கொடுப்பார். தந்தையை போன்றவர் உங்களுக்கு அடையாளம் கொடுப்பார். என்னில் ஒரு பகுதி என் தந்தையை போன்ற அருண் ஜேட்லி அவர்களுடன் சென்று விட்டது என்று குறிப்பிட்டுள்ளார் கௌதம் கம்பீர்.

கம்பீர் அரசியல்
கம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று டெல்லி மாநில பாராளுமன்ற தேர்தலில் நின்று பாஜக சார்பில் மக்களவை உறுப்பினரானார். கம்பீரின் கிரிக்கெட் வளர்ச்சியை தாண்டி, அரசியல் வளர்ச்சியிலும் அருண் ஜேட்லிக்கு பெரும் பங்கு உள்ளது.


Click it and Unblock the Notifications