அகமதாபாத்: உலகக்கோப்பை தொடரில் எங்கள் அணியின் ஆட்டத்தை நினைத்து பெருமையளிப்பதாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 42வது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. கடைசி வரை சிறப்பாக ஆடிய ஒமர்சாய் 97 ரன்கள் எடுத்து அசத்தினார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் கொயட்சே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. அதிகபட்சமாக வான் டர் டஸன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி மற்றும் ரஷீத் கான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலமாக ஆஃப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.
இந்த தோல்வி குறித்து ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஷாகிதி பேசுகையில், ஒரு கேப்டனாக எங்கள் அணியின் ஆட்டம் மகிழ்ச்சியை தருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் கடைசி நிமிடம், கடைசி நொடி வரை வெற்றிக்காக போராடினோம். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கான அனுபவமும், கற்பிதங்களும் எங்கள் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் எங்கள் பேட்ஸ்மேன்களின் ஆட்டம் பெருமையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக நாங்கள் பேட்டிங்கில் அவ்வளவு சிறப்பாக செயல்பட்டதில்லை.
அனைவரும் சேர்ந்து எங்களின் பலவீனங்களை அமர்ந்து பேசினோம். அதன் முடிவு இப்போது கண்கூடாக தெரிகிறது. அது மிகச்சிறந்த பாசிட்டிவாக பார்க்கிறேன். எங்கள் அணியில் மிகச்சிறந்த ஸ்பின் அட்டாக் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதேபோல் சிறந்த கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விரும்புகிறோம். நிச்சயம் சிறந்த அணியாக இருப்போம்.
இந்த உலகக்கோப்பை தொடர் மூலமாக உலகுக்கு சிறந்த மெசேஜை கொடுத்துள்ளோம். பெரிய அணிகளுக்கு எதிராக இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடினோம். ஒவ்வொரு போட்டியில் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடினோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் வெற்றி, எங்களின் கைகளில் இருந்தது. அந்த தோல்வி தான் எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.