மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் நடிகை பிரீத்தி ஜிந்தா ஐபிஎல் தொடர் மூலமாக மட்டும் ஆண்டுக்கு ரூ.129 கோடிக்கும் அதிக வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் விளையாடி வந்த பஞ்சாப் அணி பின்னர் பஞ்சாப் கிங்ஸ் என்று பெயர் மாற்றம் பெற்றது. இதுவரை சீசனுக்கு ஒரு கேப்டன், சீசனுக்கு ஒரு பயிற்சியாளர் என்று பஞ்சாப் அணி செய்யாத அலப்பறையே கிடையாது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் 5ஆம் இடம் பஞ்சாப் அணிக்கு தான்.

2008ஆம் ஆண்டு பஞ்சாப் அணியை நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது காதலருமான வாடியா குரூப் நிறுவனருமான நெஸ் வாடியாவும் இணைந்து வாங்கினர். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இருவரும் தலா 23 சதவிகித பங்குகளை தங்களிடம் வைத்துக் கொண்டு மீதமுள்ள கேபிஎச் ட்ரீம் கிரிக்கெட் நிறுவனத்தின் மோகித் பர்மனிடம் 46 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
அதேபோல் மீதமுள்ள 8 சதவிகித பங்குகள் கரண் பால் என்பவரிடம் விற்கப்பட்டன. இதன் மூலம் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக மோகித் பர்மன், நடிகை பிரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா மற்றும் கரண் பால் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் மூலமாக கடந்த ஆண்டு பஞ்சாப் அணி சுமார் ரூ.259 கோடி வருமானம் ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இருவரும் இணைந்து ஆண்டுக்கு ரூ.129 கோடிக்கும் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும், பஞ்சாப் அணி மூலம் உரிமையாளர்கள் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய வருமானம் ஈட்டி வருவது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.