மின்னல் வேக ஸ்டெம்பிங்.. அம்பயருக்கே பாடம்.. மீண்டும் கெத்து காட்டிய டோணி
இந்தூர்: இலங்கைக்கு எதிரான நேற்றைய 2வது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டியில், இலங்கை வீரர் அசேலா குணரத்னேவை ஸ்டெம்பிங் செய்த டோணி, நடுவர் அறிவிக்கும் முன்பாகவே அவுட் என 'அறிவித்தார்'. நடுவரைவிட துல்லியமாக அவுட் அல்லது அவுட் இல்லை என்பதை கணிப்பதில் டோணியின் திறமை மீண்டும் நேற்று நிரூபணமானது.
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலும் இப்படி ஒரு அசத்தல் ரிவ்யூ கேட்டு வைரலாகியிருந்தார் டோணி.

முதல் ஒருநாள் போட்டி
கோஹ்லி ஓய்வில் உள்ள நிலையில், ரோகித் ஷர்மா தலைமையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியை எதிர்கொண்டது இந்திய அணி. முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 38.2 ஓவர்களில், 112 ரன்களுக்கு ஆல்-அவுட்டானபோதிலும், டோணி மட்டும் நங்கூரம் பாய்ச்சி நின்று 65 ரன்கள் எடுத்தார்.

டிஆர்எஸ்
அப்போது எதிர்முனையில் பேட் செய்த பும்ராவுக்கு எல்பிடபிள்யூ கொடுக்க, கையை உயர்த்திக்கொண்டிருந்தபோதே, டோணி, டிஆர்எஸ் சோதனைக்கு பரிந்துரைக்குமாறு சொல்லிவிட்டார். நடுவர் முழுவதுமாக கையை தூக்கி முடிக்கும் சில வினாடிகளுக்குள் டோணி இது அவுட் இல்லை என கணித்து, டிஆர்எஸ் கேட்டார். டோணி கணித்ததை போலவே, டிவி ரிப்ளேயில் பார்த்த 3வது நடுவர், இது அவுட் இல்லை என தெரிவித்துவிட்டார்.
மின்னல் வேக ஸ்டெம்பிங்
இந்தூரில் நடைபெற்ற நேற்றைய 2வது டி20 போட்டியிலும் டோணி தனது கணிப்பு திறமையை வெளிப்படுத்தினார். உபுல் தரங்கா, குசால் பெரேரா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்ததால் இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை இலங்கை அணி விரட்டியது. அப்போது குல்தீப் யாதவ் வீசிய பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார் அசேலா குணரத்னே. பந்து பேட்டில் படாமல் செல்ல அதை லாவகமாக பிடித்த டோணி ஸ்டெம்பிங் செய்தார்.

அதிரடி கணிப்பு
லெக்-அம்பயர், இதை டிவி நடுவர் முடிவுக்கு விட்டுவிட, டோணியோ, இது அவுட்தான் என ஆணித்தரமாக கையை அசைத்து பவுலரிடம் கூறினார். கொண்டாட்டங்கள் அப்போதே ஆரம்பித்தன. டிவி நடுவர் ரிப்ளே செய்து பார்த்தபோது, பேட்ஸ்மேன் சரியாக கிரீசின் மீது காலை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அவுட் கொடுக்கப்படது. கிரீஸ் மீது கால் இருந்ததை நொடிப்பொழுதில் பார்த்துவிட்டுதான் உறுதியாக டோணி, அதை அவுட் என தெரிவித்தார்.

இதுதான் தல
கேப்டன் கோஹ்லி உள்ளிட்ட பெரும்பாலான இந்திய வீரர்கள் டிஆர்எஸ் விஷயத்தில் எப்போதுமே தடுமாறுவது வழக்கம். ஆனால் அதில் டோணி மட்டும் விதி விலக்கு. அவரது கணிப்புகள் பெரும்பாலும் சரியானதாக இருக்கும். எனவேதான், டிஆர்எஸ் என்பதை கூட டோணி ரிவ்யூ சிஸ்டம் என்று ரசிகர்கள் மாற்றி அழைக்கிறார்கள். டோணி கெத்துதான்ல.


Click it and Unblock the Notifications