ஆஷஸ் 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இமாலய வெற்றி.. தொடரை சமன் செய்தது
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. எனவே அடுத்துவரும் 3 டெஸ்ட் போட்டிகள் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 215 ரன்னும், கிறிஸ் ரோஜர்ஸ் 173 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி பாலோ-ஆன் ரன்னான 367-ஆவது தாண்டிவிட போராடியது. ஆனாலும், 3வது நாளில் 312 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது அணி 2வது இன்னிங்சை ஆடும் என்று அறிவித்தார்.
இதையடுத்து 254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் எடுத்து இருந்தது. கிறிஸ் ரோஜர்ஸ் 44 ரன்னுடனும், டேவிட் வார்னர் 60 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
நேற்று 4வது ஆட்டம் நடந்தது. கிறிஸ் ரோஜர்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். கிறிஸ் ரோஜர்ஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் தனக்கு மயக்கம் வருவதாக கூறிவிட்டு செய்து விட்டு மைதானத்தில் அமர்ந்தார். அணியின் மருத்துவர்கள் அவரை மைதானத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னருடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய டேவிட் வார்னர் (83 ரன்கள்) மொயீன் அலி பந்து வீச்சில் குக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஸ்டீவன் சுமித் (58 ரன்கள்) மொயீன் அலி பந்து வீச்சில் போல்டு ஆனார்.
மதிய உணவு இடைவேளைக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 49 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததுடன், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 509 ரன்களை நிர்ணயித்தது.
பின்னர் 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆடம் லைத் 7 ரன்னிலும், கேப்டன் அலஸ்டயர் குக் 11 ரன்னிலும், கேரி பேலன்ஸ் 14 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மள, மளவென்று விக்கெட்டுகளை இழந்து நடையை கட்டினார்கள்.
தேனீர் இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 37 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டூவர்ட் பிராட் 25 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜான்சன் 3 விக்கெட்டும், ஹாஸ்லேவுட், நாதன் லயன் தலா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், மிட்ஷெல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஷஸ் போட்டி தொடரின் 3வது டெஸ்ட் பர்மிங்காமில் வருகிற 29ம் தேதி தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications