லண்டன் : ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாசை இழந்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

இதில் ஸ்மித் அபார சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 279 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்த போது அடுத்த 46 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் சுருண்டது. இதன் மூலம் 91 ரன்கள் என்ற பெரிய முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி விளையாடியது.
இதில் உஸ்மான் கவஜா அரை சதம் அடிக்க ஆஸ்திரேலியா அணி 279 ரன்கள் எடுத்தது. 371 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்ஸில் களமிறங்கியது. ஜாக் கிராலி,போப் தலா 3 ரன்களில் வெளியேற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 18 ரன்களிலும் ,ஹாரி புரூக் நான்கு ரன்களிலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறி கொடுத்தனர். எனினும் தொடக்க வீரர் மற்றும் பென் ஸ்ட்ரோக்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
114 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோர் உடன் இங்கிலாந்து அணி கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த பென்டக்கட் 83 ரன்களின் வெளியேறினார். அந்த அணியின் நட்சத்திர வீரர் பேரிஸ்டோ10 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரியால் விதிமீறலுக்கு எதிராக ரன் அவுட் செய்யப்பட்டார். எனினும் இதனை அவுட் என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் தனி ஆளாக நின்று பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிதற அடித்தார். டெஸ்ட் போட்டியை டி20 போட்டி போல் மாற்றிய ஸ்டோக்ஸ், 214 பந்துகளை எதிர்கொண்டு 155 ரன்கள் விளாசினார்.
இதில் ஒன்பது பவுண்டரிகளும் ஒன்பது சிக்சரும் அடங்கும். பென் ஸ்டாக்ஸ் வெற்றியை தேடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஹேசல்வுட் வீசிய பந்தில் கேட்ச் ஆனார். இதன் பிறகு பிராட் 16 ரன்களிலும், ராபின்சன் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அறிமுகவீரர் ஜாஸ் டாங்கு 19 ரன்கள் சேர்த்து போல்ட் ஆனார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 327 ரன்கள் மட்டுமே எடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து எஞ்சிய மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆஷஸ் தொடரை வெல்ல முடியும். மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் வரும் வியாழக்கிழமை ஜூலை 6ஆம் தேதி தொடங்குகிறது.